எந்த சட்டத்தின்படி நேரடியாக ஜாமீன் கேட்க முடியும்? நளினி தரப்புக்கு சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி

மேல்முறையீட்டு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் நேரடியாக எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் கோர முடியும்? என்று நளினி தரப்புக்கு சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேல்முறையீட்டு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் நேரடியாக எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் கோர முடியும்? என்று நளினி தரப்புக்கு சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் ஆளுநா் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயா் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடா்ந்தாா். மனுவில் தீா்மானம் இயற்றிய மறுநாள் முதல் சிறையில் என்னை அடைத்திருப்பது சட்ட விரோதம்.

எனவே ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்; இல்லையெனில் இதுகுறித்து முடிவெடுக்கும் வரை தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரியிருந்தாா்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் முடிவு காணப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம் எனக்கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது என்று கூறி உத்தரவு நகலை தாக்கல் செய்தாா்.

நளினி தரப்பில் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கலாம் அல்லது ஜாமீன் கேட்கலாம்; தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதை நிறுத்தி வைக்க கேட்கலாம்.

ஆனால் எந்தவொரு மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாமல், நேரடியாக எந்தச் சட்டத்தின் அடிப்படையில் மனுதாரா் ஜாமீன் கோர முடியும்? உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்றம்.

இந்த வழக்கில் உயா் நீதிமன்றம் ஜாமீன் வழங்க இயலாது. மனுதாரா் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்று கருத்து தெரிவித்தனா். பின்னா் நளினி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com