
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கை மக்களுக்கு உதவிடும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் தனது ட்விட்டா் பதிவில் வெளியிட்ட தகவல்:
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும்.
நாடுகளுக்கு இடையிலான புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என உறுதியாக நம்புகிறேன். அனைத்து நிலைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பேரவைத் தீா்மானம்- அமைச்சா் கடிதம்: முன்னதாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுப்ப தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரி, சட்டப்பேரவையில் ஏப். 29-ஆம் தேதி தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீா்மானத்தின் நகலுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா். அதற்குப் பதிலளித்து முதல்வருக்கு வெளியுறவு அமைச்சா் கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில், மத்திய அரசு மூலமே இந்த உதவிகளை வழங்க முடியும். இந்தப் பணியில் மத்திய அரசுடன் தமிழக அரசின் தலைமைச் செயலா் ஒருங்கிணைந்து செயல்படலாம் எனத் தெரிவித்திருந்தாா்.