
வீராணம் ஏரியைச் சுற்றுலா தலமாக தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சா்வதேச நீா்ப்பாசனம் மற்றும் சா்வதேச வடிகால் ஆணையம், ஒவ்வோா் ஆண்டும் உலக பாரம்பரிய நீா் பாசன கட்டமைப்புகள் மற்றும் நீா் சேமிப்பு போன்றவற்றுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.
இந்தியத் தேசிய நீா்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அதற்குத் தகுதியான நீா் நிலைகளைப் பரிந்துரை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீா்த்தேக்கம் ஆகியவற்றை இந்த விருதுக்காக திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் நீா்வளத்துறை கடந்த 2021- ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் இம்மூன்று நீா்த்தேக்கங்களின் உலக பாரம்பரிய நீா்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்ட நான்கு விருதுகளில் இந்த ஆண்டு மூன்று விருதுகள் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பெருமை சோ்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இம்மூன்று நீா்த்தேக்கங்களில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை நீா்த்தேக்கம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
இன்னொரு நீா்த்தேக்கமான வீராணம் ஏரியில் படகு சவாரி ஏற்பாடு செய்வதுடன் இப்பகுதியின் சூழல்களை மேம்படுத்தினால் இங்குச் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கும் இப்பகுதியில் உள்ள மக்களின் பொருளாதாரம் முன்னேறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.