ரமலான் பண்டிகை: திருப்பூரில் 13,000 கிலோ பிரியாணி விற்பனை

ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் சாலை பிரியாணிக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள்
காங்கயம் சாலை பிரியாணிக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள்

திருப்பூர்: ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் காங்கயம் சாலை, பெரியகடை வீதி ஆகிய பகுதிகளில் 60 பிரியாணிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் தீபாவளி, பொங்கல், ரமலான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு அதிக அளவிலான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று காரணமாக பிரியாணி விற்பனையும் சற்று மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

அந்தவகையில், திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருக்கும் காங்கயம் சாலையில் உள்ள அனைத்து பிரியாணிக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 10 மணி முதலே கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதில், ஒரு சில கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்தனர். மேலும், ஒரு சில கடைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பிரியாணிகளை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பிரியாணிக்கடைகளின் முன்பாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பிரியாணிக்கடைகளின் முன்பாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர்கள் கூறுகையில்,

காங்கயம் சாலை, பெரிய கடை வீதிளில் உள்ள பிரியாணி கடைகளில் வார நாள்களில் 3 டன் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 4 டன் வரையிலும் பிரியாணி விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரமலான் பண்டிகையை ஒட்டி ஒரே நாளில் 13 டன் பிரியாணி விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும், சில கடைகள் அடைக்கப்பட்டு ஆர்டரின் பேரில் மொத்தமாக பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com