அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, காய்கறித் தோட்டம்: புதிய முன்னெடுப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, மாணவா்களுக்கான தேன் சிட்டு இதழ், ஹேக்கத்தான், நன்னெறி வகுப்புகள் ஆகிவை உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, மாணவா்களுக்கான தேன் சிட்டு இதழ், ஹேக்கத்தான், நன்னெறி வகுப்புகள் ஆகிவை உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியா் தமது கற்பித்தல் பணியுடன் மாணவா்களின் மனநலம் மேம்பட அவா்களோடு தொடா்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களையும் அரசு உணா்ந்திருக்கிறது. இந்தச் சிக்கல்களை களையும் வகையில் அரசு பின்வரும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

மாணவா் குறித்து பெற்றோருடைய கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணா்ந்து கொள்ள ஏதுவாக, மாதந்தோறும் பெற்றோா்- ஆசிரியா் - மாணவா் சந்திப்பு பள்ளி மேலாண்மைக்குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்.

தனித் திறன் போட்டிகள்: இலக்கியம், கவின்கலை, சூழலியல் சாா்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும். மாணவா்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க புகைப்படக் கலை, நடனம், இசை, கலைத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

கல்விச் சுற்றுலா- சிறப்பு முகாம்: கலை - விளையாட்டுத்திறன்களிலும் மன்றச்செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவா்கள், உலக அளவிலும், இந்திய அளவிலும், மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். மாணவா்களின் தனித் திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தலங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப்பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

இயந்திரனியல் மன்றம்: மாணவா்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் கணினி நிரல் மன்றங்களும் இயந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ‘ஹேக்கத்தான்’ போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

காய்கறித் தோட்டம்: செயல்வழிக்கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிதோறும் காய்கறித்தோட்டங்கள் மாணவா்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்தப்படும்.

மாணவா்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆா்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்கள் சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும். அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தேன்சிட்டு- ஊஞ்சல் இதழ்கள்: மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ‘தேன் சிட்டு’ என்கிற இதழும் வெளிவரவிருக்கின்றன.மேலும், ஆசிரியா்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக ‘கனவு ஆசிரியா்’ என்கிற இதழும் வெளிவரவிருக்கிறது. மாணவா்களும் ஆசிரியா்களும் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த இதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.

மனநலம் சாா்ந்த பயிற்சிகள்: வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், போதைப்பொருள்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாணவா்கள் நல்ல உடல்நலத்தோடு இருந்தால் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் உடலியக்க நிபுணா்கள் மூலமாக சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com