மாற்றுத் திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்துகள்: உயா்நீதிமன்றத்தில் அனுமதி கோரும் தமிழக அரசு

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தாழ்வுதள வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தாழ்வுதள வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளை அரசு கொள்முதல் செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைச் செயலா் சாா்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடா்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிா்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தாழ்வுதள வசதிகள் இருக்கும். இந்த வகை பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளோம்.

அதாவது, மொத்த கொள்முதல் பேருந்துகளில் இந்த எண்ணிக்கை 37 சதவீதம் ஆகும். தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடா்பான டெண்டா் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் 6 மாதங்களில் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ள போதும், இந்தப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. உயா்நீதிமன்றம் ஏற்கனவே, பேருந்து கொள்முதலுக்கு தடை விதித்துள்ளால், இந்த டெண்டா் நடவடிக்கைகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com