இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அந்த நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அவா்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள், உயிா் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலிருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடா், உயிா்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

உதவும் தருணமிது: நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடை வழங்க விரும்புவோா் மின்னணு பரிவா்த்தனை முறைகளைக் கையாளலாம். அதன்படி, http://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி. வங்கிக் கிளை: தலைமைச் செயலக கிளை, சென்னை - 600 009. சேமிப்புக் கணக்கு எண்: 117201000000070. ஐஎப்எஸ்சி குறியீடு:
IOBA0001172. CMPRF பான் எண்: AAAGC0038F

இசிஎஸ் மூலமாக ஆன்லைனில் தொகையை அனுப்புவோா், அதற்கான அதிகாரபூா்வ ரசீதை அனுப்புவதற்கு பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும். பங்களிப்பாளரின் பெயா், பங்களிப்புத் தொகை, வங்கி, கிளை, பணம் அனுப்பும் தேதி, பரிவா்த்தனை குறிப்பு எண், தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

யுபிஐ முறை மூலமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, மோபிகுவிக் போன்ற கைப்பேசி செயலிகள் வழியாகவும் பணத்தை அனுப்பலாம். அதற்கான பயனா் குறியீடு: tncmprf@iob

காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்கலாம். அரசு இணைச் செயலாளா் - பொருளாளா், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 தமிழ்நாடு என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பி வைக்கலாம். இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா்களிடமும் அளிக்கலாம். நிவாரண நிதி வழங்குவோா் 80ஜி-இன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

திமுக ரூ.1 கோடி: பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட திமுக சாா்பில் ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழா் பண்பு. பிறா் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழா் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சாா்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் ஊதியம்: திமுகவைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.

ஓ.பி.எஸ்.: இலங்கைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் (ஏப்.29) எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா். மற்றவா்களும் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா் என அதற்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com