பத்தமடையில் ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி: உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வியாழக்கிழமை சாலை விரிவாக்கம் பணியின்போது ஆட்டோ மீது
சாலையில் வந்த ஆட்டோவின் மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நொருங்கியது.
சாலையில் வந்த ஆட்டோவின் மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நொருங்கியது.

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வியாழக்கிழமை சாலை விரிவாக்கம் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர், பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பத்தமடை பள்ளிவாசல் 5ஆவது வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஷேக்மைதீன் மகன் காதர் மைதீன் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது ஆட்டோவில் மனைவி பக்கிராள் பானு (32), இரண்டு குழந்தைகள் மற்றும் பத்தமடை கவர்னர் தெருவைச் சேர்ந்த மைதீன் பட்டாணி மனைவியும் பக்கிராள் பானுவின் சகோதரியுமான ரஹ்மத் பீவி (28) ஆகியோருடன் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி பிரதான சாலையில் தற்போது சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை பத்தமடை அருகேயுள்ள திருப்பத்தில் சாலையோரமாக நின்ற மரத்தை ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தை கடந்து சென்ற காதர்மைதீன் குடும்பத்தினர் சென்ற ஆட்டோ மீது மரம் விழுந்தது.

மரம் ஆட்டோவின் முன் பகுதியில் விழுந்ததில் ஆட்டோவை ஓட்டிய காதர் மைதீன், அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ரஹ்மத் பீவி (28) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பக்கிராள் பானு, அவரது 2 குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பினர். அவர்கள் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து அறிந்த காதர் மைதீன் உறவினர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பிரதான சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவரது சடலத்தை மீட்க ஆட்சேபம் தெரிவித்தனர். தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன், ஏஎஸ்பி மதிவாணன், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, டிஎஸ்பி க்கள் ராமகிருஷ்ணன் (சேரனம்காதேவி), பிரான்சிஸ் (அம்பை), சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள் சுகாதேவி, முருகன், தில்லை நாகராஜன், பேரூராட்சித் தலைவி ஆபிதா, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே, பத்தமடை முஸ்லிம் ஜமாத் தலைவர் மலுக்காமலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவி நான்கு வழிச்சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிறைவேற்றினால்தான் இருவரின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர்.

தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் முன்னிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்த கைவிட்டனர். போராட்டத்தால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் இருவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்தமடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com