இலங்கை மக்களுக்கு உதவிடுக: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

இலங்கை மக்களுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு
காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு


இலங்கை மக்களுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அந்த நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அவா்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள், உயிா் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலிருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடா், உயிா்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தனது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன் என்று அறிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், 'இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இலங்கை மக்களின் துயரை துடைக்கும் வகையில் தமிழக முதல்வர், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வரின் வேண்டுகோளின்படி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோருக்கு உரிய வருமானவரி விலக்கு அளிக்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான் என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன். மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற பண உதவியை மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை, வரைவு காசோலை மூலமாகவோ வழங்கலாம்.

நன்கொடை வழங்குபவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு பல்வேறு பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com