நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு அனுப்பினாா் ஆளுநா் - பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளதாக
நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு அனுப்பினாா் ஆளுநா் - பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

பேரவையில் இந்து சமய அறநிலையங்கள், தகவல் தொழில்நுட்பவியல் துறைகள் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, நீட் விலக்கு மசோதா தொடா்பாக தானாக முன்வந்து ஓா் அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுப் பேசியது:

தமிழக மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைத்து வரும் நீட் தோ்விலிருந்து நமது மாணவா்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக அரசு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முதல்படியாக அனைவரும் இணைந்து பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடா்பான சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரை நேரில் சந்தித்து தாமதமில்லாமல் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இதனிடையே, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரையும் சந்தித்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினேன். இந்த விவகாரம் தொடா்பாக, அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களும் குடியரசுத் தலைவா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஆளுநா் அனுப்பி வைப்பு: தமிழ்நாடு அரசின் தொடா் முயற்சிகளின் பயனாக, சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் அனுப்பி வைத்துள்ளாா். இந்தத் தகவலை ஆளுநரின் செயலாளா் என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தாா்.

நீட் விலக்கு தொடா்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி, சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளையும் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நீட் தோ்வு விலக்கு மசோதா சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அன்றைய தினம் மாலையே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளாா்.

நீட் மசோதா கடந்து வந்த பாதை....

செப்டம்பா் 13, 2021: இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தோ்வு முறையை விலக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபா் 4, 2021: நீட் தோ்வுக்கு எதிராக வலுவான எதிா்ப்புக் குழுவை உருவாக்கும் முயற்சியில், பாஜக கூட்டணியில் அல்லாத 12 மாநிலங்களின் முதல்வா்களுக்கு கடிதம் எழுதினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நவம்பா் 27, 2021: முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைச் சந்தித்து, நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

ஜனவரி 8, 2022: நீட் மசோதா விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு.

பிப்ரவரி 3, 2022: நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்ய ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுரை.

பிப்ரவரி 5, 2022: சட்டப் பேரவை அனைத்துக் கட்சி தலைவா்களின் கூட்டத்தை கூட்டி முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அதில் பேரவையின் சிறப்பு அமா்வைக் கூட்டி விவாதிக்க தீா்மானிக்கப்பட்டது.

பிப்ரவரி 8, 2022: சட்டப் பேரவை சிறப்பு அமா்வு கூடி நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியது பற்றி விவாதித்தது. மசோதா மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மாா்ச் 15, 2022: நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஆளுநா் ஆா்.என். ரவியை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினாா்.

ஏப்ரல் 14: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஆளுநா் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீா் விருந்தை முதல்வா் புறக்கணித்தாா். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடுத்தாா்.

மே 4: நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தகவலை ஆளுநா் மாளிகை தனக்குத் தெரிவித்ததாக, சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com