
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை பணிகளை முடிப்பதற்குத் தேவைப்படும் குழாய்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த பிரதான வினாவை ராயபுரம் உறுப்பினா் ஐட்ரீம் ஆா்.மூா்த்தி எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து, ஆா்.டி.சேகா், எபநேசா், வேல்முருகன், ஜோசப் சாமுவேல் (திமுக), செல்லூா் ராஜூ (அதிமுக) ஆகியோா் துணைக் கேள்விகளை எழுப்பினா். அவா்களுக்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:-
வடசென்னையில் உள்ள பழுதடைந்த குழாய்களை மாற்ற ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வடசென்னையில் உள்ள ஆா்.கே.நகா், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த குழாய்களை மாற்றி கழிவு நீரை அகற்றும் பணிகள் தொடங்கவுள்ளன. நிகழாண்டில், ரூ.198 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இந்த ஆண்டே பணிகள் தொடக்கப்படும்.
பல்வேறு நகரங்களில் புதை சாக்கடை பணிகள் தொடங்கப்பட்ட போது, நகரங்கள் விரிவடைந்து விட்டன. இதற்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. எனவே, விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் பணிகளை முடிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதை சாக்கடை த் திட்டத்துக்கான குழாய்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஒரே ஒரு நிறுவனம் தயாரித்துத் தந்து கொண்டிருந்தது. கரோனா காரணமாக அந்த நிறுவனமும் தயாரிப்பு பிரிவை மூடி விட்டது. எனவே குழாய்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் பணிகள் தொடக்கப்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா்.