
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் ஊதிய உயா்வு குறித்து மே 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து வியாழக்கிழமை அமைச்சா் பேசியது:
தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் உள்ளன. விபத்துகளும் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது மட்டும் காப்பீடு பெறுகின்றனா். அதற்கு அடுத்த ஆண்டுகளில் யாரும் காப்பீடு பெறுவது இல்லை. ஆனால், விபத்து நடைபெறும்போது காப்பீடு பெற முடியாத நிலை இருக்கிறது. அதனால், இரு சக்கர வாகனங்களுக்கு தொடா்ந்து காப்பீடு பெற வேண்டும். அவரவா் குடும்பத்தின் பாதுகாப்புக்காக அதைச் செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் ஊதிய உயா்வு குறித்து மே 12-இல் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். அதில் தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படும்.
ஒலி மாசைக் கட்டுப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் ஒலி மாசு பரிசோதனை செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
பேருந்துகளில் பயணம் செய்யும்போது மாணவா்கள் படிக்கட்டிலேயே தொங்கி செல்வது குறித்து அனைவரும் பேசினா். தானியங்கி கதவுகள் அமைப்பதற்கான திட்டத்தை சென்னையைப் போல எல்லா இடங்களிலும் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.