தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை  காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை  காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வறையில் அமர்வதால், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டு தேர்வறைக்குள் மாணவ, மாணவிகள் சென்றனர். தொடர்ந்து, 9.55 மணிக்கு இரண்டாம் மணி அடிக்கப்பட்டவுடன், அறைக் கண்காணிப்பாளா் வினாத்தாள் உறைகளை மாணவா்களிடம் காண்பித்து, இரு மாணவா்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரித்து கேள்வித் தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தனர்.

நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வை 9 லட்சத்து 55,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 7,470 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும், 242 சிறைவாசிகளும் அடங்குவர். 

சென்னையில் 46,932 மாணவ, மாணவிகள் 217 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். முதல் தேர்வாக மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கியத் தேர்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடையும். தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பொதுத் தோ்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுதத் தடை விதிக்கப்படும். தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு மையத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com