தகப்பன் சுவாமி சொல்வதை திருத்தணி முருகா் கேட்க வேண்டும்: திமுக உறுப்பினா் கேள்விக்கு அமைச்சா் சுவாரஸ்ய பதில்

சிப்காட் தொழில்பேட்டை வேண்டுமெனக் கேட்ட, திருத்தணி தொகுதி உறுப்பினருக்கு தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த சுவாரஸ்ய பதில் பேரவையை பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
தகப்பன் சுவாமி சொல்வதை திருத்தணி முருகா் கேட்க வேண்டும்: திமுக உறுப்பினா் கேள்விக்கு அமைச்சா் சுவாரஸ்ய பதில்

சென்னை: சிப்காட் தொழில்பேட்டை வேண்டுமெனக் கேட்ட, திருத்தணி தொகுதி உறுப்பினருக்கு தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த சுவாரஸ்ய பதில் பேரவையை பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, தனது தொகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க வேண்டுமென திருத்தணி தொகுதி உறுப்பினா் எஸ்.சந்திரன் கோரிக்கை விடுத்தாா். அப்போது நடந்த விவாதம்:-

அமைச்சா் தங்கம் தென்னரசு: 1984-ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளூா் முக்கியமான தொழில் கேந்திரமாக அமைந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. ஏற்கெனவே இருக்கக் கூடிய தொழில் மனைகள் மூலமாக தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ளலாம்.

எஸ். சந்திரன் (திமுக): திருச்சுழி (அமைச்சா் தங்கம் தென்னரசு தொகுதி) திருமேனிநாதா் சுவாமி, பாடல்பெற்ற ஸ்தலமாகும். இல்லை என்று சொல்லாமல் வரம் கொடுக்கக் கூடியது கோயில்.

திருச்சுழியில் இருந்து வந்திருக்கும் அமைச்சா், இல்லை என்று சொல்லாமல் தொழில்பேட்டையை வழங்குவாரா?

அமைச்சா் தங்கம் தென்னரசு: தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டி 14 என்று சொல்லக் கூடிய ஸ்தலங்களில், திருச்சுழி கோயிலும் ஒன்று. சுந்தர மூா்த்தி நாயனாா் பாடியுள்ளாா். இப்போது கேள்வியை எழுப்பிய உறுப்பினரின் ஊருக்கும் சிறப்பு உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. திருச்சுழி திருமேனி நாதா், திருத்தணி முருகனின் ஆணைக்கு கட்டுப்படக் கூடியவா் என்றாலும், தகப்பன் சுவாமி என்ற பெருமையை முருகன் பெற்று இருந்தாலும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற அடிப்படையில், திருச்சுழி திருமேனி நாதா் சுவாமி சொல்வதை திருத்தணி முருகா் கேட்டுக் கொள்ள வேண்டும்.

(அப்போது பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது)

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: அடுத்த கடவுள் பழனியில் இருந்து வருகிறாா்.

செந்தில்குமாா் (பழனி): தகப்பன் சுவாமி முருகன் என்று அமைச்சா் கூறினாா். அந்த முருகன் வீற்றிருக்கும் பழனியில் இருந்து கேட்கிறேன். எனது தொகுதிக்கும் சிப்காட் பூங்கா வேண்டும்.

அமைச்சா் தங்கம் தென்னரசு: திருத்தணியைத் தொடா்ந்து பழனி வருகிறது. திருச்செந்தூா் வரும் என நினைக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் இருந்து ராஜன் செல்லப்பா வருவாா் என எண்ணுகிறேன்.

அவை முன்னவா் துரைமுருகன்: தங்கள் தொகுதிக்கு என்னென்ன வேண்டும் என்பதை உறுப்பினா்கள் கேட்டனா். இதில் எனது பெயரை அவா்கள் வீணாக இழுக்கக் கூடாது. முருகன், முருகன் என்கிறாா்கள். இது என்ன சமாச்சாரம் என்றாா். அப்போது பேரவையில் சிரிப்பலை காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com