ஓராண்டு திமுக ஆட்சி: என்ன சொல்கிறார் ஓ. பன்னீர்செல்வம்? 

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள்படும் ஓயாத துன்பங்கள் என்று தலைப்பிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள்படும் ஓயாத துன்பங்கள் என்று தலைப்பிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், தி.மு.க.வின்  வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்துவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் பொதுமக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக, தி.மு.க.வின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து. ‘நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்’ என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஓரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் இதற்கான சட்டமுன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்தப் பிறகுதான் மேற்படி சட்டமுன்வடிவு சட்டமாகும் என்ற நிலையில், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பது போல் மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த ஓராண்டில் பலர் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீட் தேர்விற்கு மூலக் காரணமாக இருந்துவிட்டு, இன்று நீட் தேர்வை ரத்து செய்யப் போகிறோம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல். அடுத்த முக்கியமான வாக்குறுதி கல்விக் கடன் ரத்து. “30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓராண்டாகியும் இது குறித்து தி.மு.க. அரசு வாய் திறக்கவில்லை. 

தி.மு.க.வின் இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் மேலும் கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக, கல்விக் கடன் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் வங்கிகளில் தான் வழங்கப்படுகிறது. இதற்கான அதிகாரம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றிடம்தான் இருக்கிறதே தவிர மாநில அரசிடம் இல்லை. இதையும் மீறி கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றால், மாணவ, மாணவியர் பெற்ற கடனை மாநில அரசு தனது நிதியிலிருந்து ஒரே தவணையில் வட்டியுடன் தொடர்புடைய வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். இது சாத்தியமற்ற ஒன்று. சாத்தியமற்ற ஒன்று என்று நன்கு தெரிந்திருந்தும் அளிக்கப்பட்ட வாக்குறுதி.

மற்றொரு முக்கியமான வாக்குறுதி நகைக் கடன் ரத்து. தி.மு.க. அரசு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் ரத்து செய்யப்படும் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒருபுறம் என்றால், “நகைக் கடன் வாங்காதவர்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள், தளபதி தான் ஆட்சிக்கு வரப் போகிறார், எல்லா கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்” என்ற பிரச்சாரம் வேறு மறுபுறம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயனாளிகளின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்தது.

மக்களை கவர்ந்த மற்றொரு வாக்குறுதி மாதம் ஒரு முறை மின் கட்டணம். இதன்மூலம் 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயனடைவர் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் “மின்சார உட்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்” என்று கூறியிருக்கிறார். மின்சார உட்கட்டமைப்புகளை பலப்படுத்துவது என்பது ஒரு தொடர் செயல். இதற்கு முடிவே இல்லை. எனவே, ‘இது’ முடிந்து ‘அது’ என்பது ‘முடியாது’ என்பதற்குச் சமம்.

மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதி மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை. பெரும்பாலானோர் இந்த வாக்குறுதியை நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை என்று குறிப்பிட்விட்டு, நிதிநிலை அறிக்கையில் இது ஏழ்மையானவர்களுக்கான திட்டம் என்று தி.மு.க. அரசு கூறுகிறது. இதன்மூலம், மொத்த மகளிரில் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான மகளிருக்கு அளித்துவிட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கூறிக் கொள்ளப் போகிறது தி.மு.க. இது ஒருவிதமான ஏமாற்று வேலை.

மொத்தத்தில், மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com