தமிழக வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவை இரண்டு: ஸ்டாலின் எதைச் சொல்கிறார்?
தமிழக வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவை இரண்டு: ஸ்டாலின் எதைச் சொல்கிறார்?

தமிழக வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவை இரண்டு: ஸ்டாலின் எதைச் சொல்கிறார்?

நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை இரண்டு என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை: நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை இரண்டு என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் நிறைவாக அவர் கூறியதாவது, இந்த ஓராண்டு காலத்தில் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளவும் மாட்டேன். ஓராண்டு காலத்திற்குள் செய்யக்கூடியதைவிட அதிகமாகச் செய்துவிட்டோம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.  நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்பதையும் நான் மனதார ஒப்புக் கொள்கிறேன். இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை நிதிநிலை நெருக்கடியும், மத்திய அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகளும். இந்த இரண்டு தடைகள் மட்டும் இல்லாமல் போயிருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் தீட்டி இருக்க முடியும். 

தடைகள் இல்லாத வாழ்க்கை ஏது? எனது வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகள்தான் என்னைக் கூர்தீட்டி இருக்கிறது, பக்குவப்படுத்தி இருக்கிறது.  உறுதியானவனாக என்னை இங்கே நிற்க வைத்திருக்கிறது. மனிதர்களை அடையாளம் காட்டி இருக்கிறது. எனவே இதுபோன்ற தடைகள் காலம் காலமாக இருப்பவைதான். இந்தத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கக்கூடிய எதிர்மறைச் சிந்தனை கொண்டவனாக இருக்கக்கூடியவன் அல்ல நான். இந்தத் தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற நேர்மறைச் சிந்தனைக் கொண்டவன் நான்.  அத்தகைய நேர்மறையான சிந்தனைகள்தான் இந்த ஓராண்டு கால வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என்று நான் மனதார நம்புகிறேன்.

மற்றவர்களின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்யக்கூடியவன் அல்ல நான். என் பலத்தை நம்பியே நான் அரசியல் செய்ய நினைக்கிறேன்.  எனது பலம் என்பது எனது இலக்கில் இருக்கிறது. இந்த இலக்கை எப்படியும் நான் அடைவேன். இந்தியாவைப் போல குறிக்கோள் உள்ள நாடு உலகத்தில் இல்லை. அதேநேரத்தில் குறிக்கோளுக்கும் செயல்முறைக்கும் இடையில் பெரிய அகலம் உள்ள நாடும் உலகத்தில் இல்லை என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்பதே என்னுடைய குறிக்கோள். குறிக்கோளும் செயல்முறையும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அதனால்தான் நான் செய்யக்கூடிய அறிவிப்புகளைச் செயல்படுத்த அதற்கான கால அவகாசத்தைக் குறிப்பிட்டு ‘டேஷ்போர்டு’ ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டமிடுதல் இருந்தால் போதும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தி முடித்துக் காட்டலாம்.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என்பதை இந்த மாமன்றத்தில் உறுதியாகச் சொல்கிறேன்.

என்னுடைய இலக்குக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர். அந்த இலக்கை அடைய பெரியாரின் கொள்கை வலிமையும்,  அண்ணாவின் மானுடப்பற்றும்,  கருணாநிதியின் விடாமுயற்சியும் அன்பழகனின் பொறுமையும் கொண்டு நான் எந்நாளும் உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! 

இந்த முதலாண்டு முத்தான தொடக்கமாக அமைந்திருக்கிறது. இரண்டாமாண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப் போகிறது. எனது ஆட்சிப் பயணத்தை உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம் என்று உரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com