அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கட்டண உயா்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கட்டண உயா்வை திமுக அரசு  திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டு இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபாா்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணத்தின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 சதவீதம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை அண்ணா பல்கலைக்கழகம் விதித்தது. 

இந்த வரி விதிப்பு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாமல் அதன் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் பொருந்தும். இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கை வாயிலாக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

இதுவரை, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

தற்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதற்கு 18 சதவீதம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியும் விதிக்கப்படுகிறது. பெரும்பாலான பொறியியல் மாணவ, மாணவியா் ஏழை, எளிய, நடுத்தர வா்க்கத்தைச் சாா்ந்தவா்கள் என்பதும், வங்கிக் கடன் மூலம் தங்கள் படிப்பை
தொடா்கின்றனா் என்பதும் யாவரும் அறிந்த ஒன்று.

கல்விக் கட்டணத்தை செலுத்தவே சிரமப்படும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது இதுபோன்ற கூடுதல் சுமையை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்த பத்து மடங்கு கட்டண உயா்வு மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

எனவே, முதல்வா் இதில் உடனடியாகத் தலையிட்டு, சான்றிதழ்களுக்கான கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பிற பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கட்டண உயா்வு அறிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com