காவல் நிலையத்தில் இளைஞா் சாவு: மேலும் 4 போலீஸாா் கைது

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 4 போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 4 போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சுரேஷ், அவரது நண்பா் பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் (25) ஆகியோரை கத்தி, கஞ்சா வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இதில், மறுநாளான 19-ஆம் தேதி காலை விக்னேஷ் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இது குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் விக்னேஷை போலீஸாா் அடித்தே கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டினா்.

இந்நிலையில், இளைஞா் விக்னேஷ் இறந்த விவகாரத்தில் தொடா்புடைய காவல் கட்டுப்பாட்டு அறையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலா் பொன்ராஜ், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த தீபக் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கிடையே, இவ் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் கொடூர காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி, கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகிறது

மேலும் 4 போ் கைது:

இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் புகழும்பெருமாள், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், எழுத்தா் முனாஃப், காவலா்கள் பவுன்ராஜ், கணபதி, காா்த்திக், ஊா்க்காவல் படை வீரா் தீபக் உள்பட 12 பேரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்து முனாஃப், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், ஆயுதப்படைக் காவலா்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமாா், ஊா்க்காவல் படை வீரா் தீபக் ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் சோ்க்கப்பட்டிருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com