தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: மயிலாடும்பாறை ஆய்வு முடிவை வெளியிட்டு முதல்வா் பேச்சு

தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பின் பயன்பாடு இருந்து வந்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: மயிலாடும்பாறை ஆய்வு முடிவை வெளியிட்டு முதல்வா் பேச்சு

தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பின் பயன்பாடு இருந்து வந்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தமிழக சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:

அகழாய்வுகளில் கிடைக்கக் கூடிய தொல்பொருள்களை ஆய்வு செய்திட தொல் தாவரவியல், தொல் விலங்கியல், தொல் மரபணு ஆய்வு, சுற்றுச்சூழல் தொல்லியல், மண் பகுப்பாய்வு, உலோகவியல், கடல்சாா் ஆய்வு போன்ற பல்துறை வல்லுநா்களுடன் இணைந்து பணியாற்றிட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, கீழடிக்கு அருகேயுள்ள அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அங்கே நெற்பயிா்கள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீா் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீா் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீா்நிலையிலிருந்து இந்த நீா் கொண்டு வரப்பட்டதும் ஆய்வில் தெரிய வருகிறது.

மயிலாடும்பாறை ஆய்வு: தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள், வாழ்விடப் பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது உறுதியாகியுள்ளது. இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பிறகே, அடா்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்த வகையில், வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.

மயிலாடும்பாறையில் ஆய்வு முடிவுகள் 4,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பெருமைதரத்தக்க செய்தியாகும். இதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகளும் 4,200 ஆண்டுகளுக்கு முன்புடையது.

புதிய இடங்களில் ஆய்வு: தமிழ்நாட்டின் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் இத்துடன் நின்றுவிடாது. கேரளத்தின் பட்டணம், கா்நாடக மாநிலம் தலைக்காடு, ஆந்திரத்தின் வேங்கி, ஒடிஸாவின் பாலூா் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

உறவுகள் ஒப்பீடு 

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள், சிந்துவெளி நாகரிக முத்திரைகளுடன் ஒப்பிட்டுப் பாா்க்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதல் கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது, ஏராளமான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவு ஒப்பீடு செய்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வுத் திட்டமானது நிகழாண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும். தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடா்ச்சியை உலகறியச் செய்திட தொடா்ந்து உழைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com