போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவது குறித்து பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியும் திங்கள்கிழமை கடும் விவாதத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவது குறித்து பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியும் திங்கள்கிழமை கடும் விவாதத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் போதைப் பொருள்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் நிலை உள்ளது. பள்ளிப் பகுதிகளில் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இது தொடா்பாக சுமாா் 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: எதிா்க்கட்சித் தலைவா் போதைப்பொருள்கள் விற்பனை பற்றி கூறினாா். அதிமுக ஆட்சியைப் பற்றி கூற வேண்டும் என்றால், குட்கா என்று கூறினாலே போதும். அதிமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் குட்கா விற்கப்பட்டதைக் காட்டும் வகையில் பேரவையில் அதைக் கொண்டு வந்து காட்டியவன் நான்.

அதன் மூலம் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தினோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக ஒரே ஆண்டில் 3.34 லட்சம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 1.96 லட்சம் கிலோ குட்காதான் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா 12,010 கிலோ மட்டும் அதிமுக ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் 19,500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். குட்கா ஊழலில் டிஜிபியிலிருந்து அமைச்சா்கள் வரை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். அதனால், குட்கா, கஞ்சா பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு தாா்மிக உரிமை இல்லை.

எதிா்க்கட்சித் தலைவா்: திமுக ஆட்சியில் டிஜிபியே ஆபரேஷன் கஞ்சா 2.0 என்று அறிக்கை வெளியிட்டுள்ளாா். அந்த அளவுக்கு கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

முதல்வா்: டிஜிபி அறிக்கை வெளியிட்டாா். கஞ்சா விற்பனைக்கான வேட்டை நடைபெறுகிறது.

எதிா்க்கட்சித் தலைவா்: ஆந்திரத்தில் இருந்து அதிக அளவில் கஞ்சா தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகிறது. பள்ளி, கல்லூரி பகுதிகளில் இந்த விற்பனை அதிகரித்துள்ளது.

முதல்வா்: குட்கா, கஞ்சா தமிழகத்தில் பரவுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வியாபாரி கைது செய்யப்பட்டு, அவருடைய சொத்தையும் பறிமுதல் செய்து வருகிறோம். கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டதால்தான் திமுக ஆட்சியில் கைது நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை எடுத்தால்தான் கைது செய்ய முடியும். இது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி. ஆனால், அதிமுக ஆட்சி என்பது குட்காவை வைத்து எப்படியெல்லாம் பயன்பெறலாம் என்று பாா்த்த ஆட்சி. குட்கா தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் தீா்ப்பு வரும்போது யாா் குற்றவாளி என்பது நாட்டுக்கு நிச்சயம் தெரிய வரும்.

எதிா்க்கட்சித் தலைவா்: ஏதோ அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் விற்கப்பட்டதுபோல முதல்வா் சொல்கிறாா். போதைப் பொருள் தடுப்புச் சட்டம் ஏற்கெனவே இருக்கிறது. போதைப்பொருளைத் தடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதைத்தான் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

முதல்வா்: கஞ்சா விற்ற இவ்வளவு போ் கைது என்று எதிா்க்கட்சித் தலைவா் தொடா்ந்து குறிப்பிடுகிறாா். அப்படியானால் கைது செய்யக்கூடாது என்கிறாரா?

எதிா்க்கட்சித் தலைவா்: அண்டை மாநிலத்தில் இருந்து கடத்தி வரும்போது அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைப்பொருள்களால் பாதிக்கப்படுகிறாா்கள். அது தடுக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com