முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா? ஸ்டாலினின் நகைச்சுவை பேச்சு

தன்னுடைய கடமையை முடிக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
ஒரு முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா? ஸ்டாலினின் நகைச்சுவை பேச்சு
ஒரு முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா? ஸ்டாலினின் நகைச்சுவை பேச்சு


சென்னை: ஒரு முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா? என்று நினைக்காமல் அமைச்சர் தா.மோ. அன்பரசன், தன்னுடைய கடமையை முடிக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல ஏற்றுமதியாளர் விருது விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் எப்போது முடியும் என்று காத்திருந்து அதற்கான தேதியை வாங்கி, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர்  தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு நான் முதலில் என்னுடைய வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் அதே நேரத்தில், ஒரு முதலமைச்சர் ஒரு நாளாவது ஓய்வெடுக்கக் கூடாதா என்று நினைக்காமல், அவர் தன்னுடைய கடமையை முடிக்க வேண்டும் என்பதற்காக சுறுசுறுப்போடு தனது துறையைப் பற்றி மட்டும் கண்ணும் கருத்தோடும் இருந்து அந்தப் பணியை அவர் முடித்திருக்கிறார். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அவர் துறையிலே எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

6-ஆவது மற்றும் 7-ஆவது தென் பிராந்திய சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா, தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னையில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்திய அளவில்  35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  இந்த அமைப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் 27 விழுக்காட்டுக்கும் அதிகமாக பங்களிக்கிறது.  5 ஆண்டுகளுக்குள் இந்தப் பங்கு 35 விழுக்காட்டைத் தாண்டும் என்று நான் நம்புகிறேன். தென் மண்டலத்தில் தமிழகத்தின் பங்கு மிகமிக அதிகமானது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். 

மோட்டார் வாகனம் மற்றும் பாகங்கள்,  ஆடை மற்றும் அணிகலன்கள்,  காலணிகள்,  கொதிகலன்கள்,  இரப்பர் -  உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

அதனால்தான் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, மாநிலப் பொருளாதாரம் மாற வேண்டும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.  இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமாக வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து  இருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும். இதனை அடைவதற்கான புதிய உத்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 22- ஆம் தேதி நான் வெளியிட்டேன். இதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான
❖ தஞ்சாவூர் ஓவியங்கள் - தட்டுகள், வீணை
❖ கோவை கோரா காட்டன் சேலைகள் 
❖ கோவில்பட்டி கடலைமிட்டாய்  உள்ளிட்ட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் இருக்கிறது. 

வெளிநாடுகளிலும், இந்தப்  பொருட்களுக்கு நல்ல வரவேற்பு  இருக்கிறது.  இதன் மூலம், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியின் மூலம் மேன்மை அடைந்திட முடியும். இவற்றை அதிகமாகத் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், கொஞ்சமும் தரம் குறைந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த ஏற்றுமதிக்கான பொருள்களை ஆங்காங்கே உற்பத்தி செய்தாலும் அவற்றை ஒன்று திரட்டுவதிலும், அப்பொருள்களின் தரத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும் இருக்கக்கூடிய இடர்பாடுகளை களையும் விதமாக, தனியார் பங்களிப்புடன் ஒரு ஏற்றுமதி கொள்முதல் அமைப்பை உருவாக்க ஃபியோ அமைப்பு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com