அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைவு: தரவுகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

அதிமுக ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக பேரவையில் தரவுகளை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

அதிமுக ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக பேரவையில் தரவுகளை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து செவ்வாய்க்கிழமை அவா் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் திருட்டு வழக்குகளில் 53 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.144 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. உளவுப் பிரிவினரின் முன்னெச்சரிக்கை தகவல்கள் அடிப்படையில், கடந்த ஓராண்டில் 268 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2020 மே முதல் 2021 ஏப்ரல் வரை 1,695 கொலைகள் நிகழ்ந்தன. ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்த கொலைகள் 1,558. அதிமுக ஆட்சியில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் 146. அது திமுக ஆட்சியில் 103-ஆகக் குறைந்தது. அதிமுக ஆட்சியில் கூலிப் படைக் கொலைகள் 30. இந்த ஆட்சியில் அது 18-ஆகக் குறைந்தது.

துப்பாக்கிச்சூடு: அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 16. திமுக ஆட்சியில் இந்த நிலை ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12.74 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இப்போது பெருமளவு குறைந்து 8.66 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

மாநிலத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 2021 மே மாதம் முதல் கடந்த மாா்ச் வரை 4 ஆயிரத்து 496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றுள் 3,441 வழக்குகளில், நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக வரதட்சிணை தொடா்பான கொலைகள், பாலியல் கொடுமைகள், மானபங்க வழக்குகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் நம்பிக்கையுடன் முன்வந்து புகாா்களை அளித்து வருகிறாா்கள்.

எத்தனை சக்திகள் முயன்றாலும் ஜாதி, மத மோதல்கள் நிகழாமல் சமூக நல்லிணக்கத்தின் தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மத மோதல்களை ஏற்படுத்துவோா் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமளிக்க முடியாது. அவ்வாறு முயலுவோா் சட்டத்தின் தண்டனையை நிச்சயம் அனுபவிக்கக் கூடிய சூழலை அரசு நிச்சயம் உருவாக்கும். வலைதள யுகத்தின் ஆபத்துகளை அறிந்து இந்த அரசு அவற்றைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அது தொடரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com