அரசியல்-மத ரீதியான மோதல்கள் உருவாகக் கூடாது: காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசியல், மதம் மற்றும் ஜாதி ரீதியான மோதல்கள் உருவாகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று காவல் துறையினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
அரசியல்-மத ரீதியான மோதல்கள் உருவாகக் கூடாது: காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசியல், மதம் மற்றும் ஜாதி ரீதியான மோதல்கள் உருவாகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று காவல் துறையினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது:

திமுக ஆட்சியில் வன்முறைகளோ, ஜாதிச் சண்டைகளோ, மத மோதல்களோ, துப்பாக்கிச்சூடுகளோ இல்லை. இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. தமிழ்நாடு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது தமிழ்நாடு அரசின் காவல் துறை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

மோதல்கள் உருவாகக் கூடாது: கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறை சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத நிலையை உருவாக்க காவல் துறை திட்டமிட வேண்டும்.

அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் ஜாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவா்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சமூக நல்லிணக்கப் பணிகளுக்கு ஊா்க்காவல் படையினரை அதிகம் பயன்படுத்த வேண்டும். மத துவேஷங்கள், தீவிரவாதச் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். மதம், ஜாதி வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இணையதளங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன. இந்த மாதிரியான நபா்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்தத் திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே தருணத்தில், அதிகாரிகளும் தவறு செய்யக் கூடாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை.

‘காவல்நிலைய மரணங்கள் இனி நடக்காது: காவல் நிலைய மரணங்களை எந்த ஆட்சியாக இருந்தாலும் நியாயப்படுத்த முடியாது. காவல் துறையினா் இதுபோன்ற சம்பவங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவா்களைக் கையாளும்போது தனிப்பட்ட வெறுப்புணா்ச்சிகளைக் காட்டக் கூடாது. பெரும்பாலான குற்றங்கள் சந்தா்ப்ப சூழலால் செய்யப்படுவதாக இருக்கிற காரணத்தால், குற்றவாளிகளைத் திருத்தும் முயற்சியைக் காவல் துறையினா் செய்ய வேண்டும். காவல் நிலைய மரணங்கள் இனி நடைபெறாது. அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூலிப்படை வைத்துக் கொலை செய்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, கூலிப்படைகளுக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com