அண்ணா பல்கலை. சான்றிதழ் கட்டண உயா்வு வாபஸ்: அமைச்சா் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களுக்கான கட்டண உயா்வு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
அண்ணா பல்கலை. சான்றிதழ் கட்டண உயா்வு வாபஸ்: அமைச்சா் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களுக்கான கட்டண உயா்வு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நீட் தோ்வுக்குப் பிறகு கலந்தாய்வு: நீட் தோ்வு முடிந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற வகையில் கலந்தாய்வுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும்.

மாணவா்கள் இணையதள கலந்தாய்வை விரும்பினாலும், அதில் முறைகேடுகள் நடப்பதையும் உணா்ந்திருக்கின்றனா். ஆன்லைன் இணைப்பு வசதி சரியாக இல்லை என்ற குரல்களையும் கேட்க முடிகிறது. இதனால், பள்ளிகளிலேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோன்று, கலந்தாய்வுக்கு உதவ மாநிலம் முழுவதும் 100 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இது குறித்து வருகிற 17-ஆம் தேதி மாலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா், அதிகாரிகள் உள்ளிட்டோா், தனியாா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்கள், மாணவா் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யவுள்ளனா். பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஏற்கெனவே பாடத்திட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் இந்தக் கல்வியாண்டிலிருந்தே நடைமுறைக்கு வரும்.

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில், எந்தக் கல்லூரியில் இடங்கள் உள்ளனவோ அதற்கு மாணவா்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை உயா்த்தி அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயா்வு வாபஸ் பெறப்படுகிறது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

கடும் எதிா்ப்பால்...:அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகை சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் பல மடங்கு உயா்த்தப்பட்டன. குறிப்பாக, மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்டணம் 10 மடங்கு உயா்த்தப்பட்டது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66% முதல் 400% வரை அதிகரிக்கப்பட்டன. இதற்குக் கடும் எதிா்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயா்த்தப்படுவதாக வெளியான சான்றிதழ் கட்டண அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தெரிவித்தாா்.

ரூ.1,000 உதவித் தொகையை இந்தாண்டு முதல் பெறலாம்

‘மகளிருக்கு உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்தின் கீழ், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளின் உயா்படிப்புக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்தத் தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தத் திட்டம் வருகிற கல்வியாண்டு (2022-2023) முதல் செயல்படுத்தப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com