உள்துறை அமைச்சக அதிகாரிக்கு லஞ்சம்: கோவை தனியார் மருத்துவமனை தலைவர் மீது சிபிஐ வழக்கு

கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 
உள்துறை அமைச்சக அதிகாரிக்கு லஞ்சம்: கோவை தனியார் மருத்துவமனை தலைவர் மீது சிபிஐ வழக்கு

கோவை: தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைக்கான அனுமதியை நீட்டித்து தருவதற்கு தில்லியைச் சோ்ந்த உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்த குற்றச்சாட்டில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பட்டயக் கணக்காளரை புதன்கிழமை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகளை வசூலிப்பதில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதில் உள்துறை அமைச்சக ஊழியா்கள், தன்னாா்வலா்கள், இடைத்தரகா்கள் இணைந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தில்லி, ஜாா்க்கண்ட், ஹரியாணா, ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம், மணிப்பூா், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரு நாள்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனா். சில இடங்களில் இந்த சோதனைகள் தொடா்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகம், தில்லியைச் சோ்ந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி பிரமோத் குமாா் பாசின் என்பவருக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி, வழக்கின் முதல் குற்றவாளியான பிரமோத் குமாா் பாசின், அனுமதியை நீட்டித்து தருவதாகக் கூறி டாக்டர் ராஜசேகரனை அனுகி, ரூ. 2 லட்சம் கேட்டுள்ளார். வாகேஷ் தொடர்பு கொள்ளுமாறு ராஜசேகரன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதணனைத் தொடர்ந்து மற்றொரு ஆடிட்டர் சுகுணா ரவிச்சந்திரனிடம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஏப்ரல் 7 ஆம் தேதி அந்நிய செலாவணி நெட்வொர்க் மூலம் அவருக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ. 50 ஆயிரத்தை அனுமதியை நீட்டித்த பிறகு செலுத்த வேண்டும் என்ற தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இந்த தகவலின் படி விசாரிக்கத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிமம் புதுப்பிப்பதற்காக அவருக்கு லஞ்சம் கொடுத்ததை கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் இதுவரை, நாடு முழுவதும் 6 அரசு ஊழியா்கள் உள்பட  37 பேர் மீது குற்றச் சதி பிரிவுகள் (120 (பி), ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் (419), (ஏமாற்றுதல் (420), ஏமாற்றும் நோக்கத்திற்காக போலி செய்தல் (46 ), மோசடி அல்லது நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் (471) ஆகிய பிரிவுகள் மற்றும்  ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 7ஏ மற்றும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவர்களிடம் இருந்து இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.3.21 கோடிக்கு மேல் பறிமுதல் செய்துள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சேனாதிபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த, தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரும்,  கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பட்டயக் கணக்காள வாகேஷ் (31) என்ற பட்டயக் கணக்காளரை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(மே.10) கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வாகேஷ் நேற்று புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (மே 13) ஆஜா்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டாா். இதையடுத்து வாகேஷை, சிபிஐ அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைக்கான அனுமதியை நீட்டித்து தருவதற்கு தில்லியைச் சோ்ந்த உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக டாக்டர் ராஜசேகரன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில ஊழியர்கள் உள்பட 37 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பட்டயக் கணக்காள வாகேஷ் ஒன்பதாவது குற்றவாளியாகவும், டாக்டர் ராஜசேகரன் மற்றும் பட்டயக் கணக்காளர் சுகுணா ரவிச்சந்திரன் முறையே 8 மற்றும் 10 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com