ஓராண்டு சாதனையில் அளப்பரிய சாதனையாக முதல்வர் ஸ்டாலின் கருதுவது?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
எஸ்.ஆர். ராஜா எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் முதல்வர் பங்கேற்பு
எஸ்.ஆர். ராஜா எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் முதல்வர் பங்கேற்பு


சென்னை: இந்த ஓராண்டு திமுக ஆட்சியில், நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பரிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மணமக்களுக்கு  நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது. எம்எல்ஏ ராஜாவைப் பற்றி  நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. தாம்பரம் மக்களே ஒவ்வொரு தேர்தலிலும், இவர்தான் எம்.எல்.ஏ. என்று முடிவு செய்து 2006, 2016, 2021 என்று மூன்று முறை நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் தேர்தலில் தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களிடத்தில் அந்த அளவுக்கு ஒரு செல்வாக்கைப் பெற்றவராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் சாதாரணமாக யாரிடத்திலும், தேவையில்லாமல் பேசமாட்டார், என்னிடத்தில் கூட. எது தேவைப்படுகிறதோ, எதை பேசவேண்டுமோ, எதைப் பேசினால், அதில் வெற்றி காண முடியுமோ, அதை உணர்ந்து, ஆனால் அதே நேரத்தில் அழுத்தந்திருத்தமாக, அதை எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றலை பெற்றவர் நம்முடைய ராஜா. அவர் தன்னுடைய மகனுக்கு, தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி பல்வேறு தியாகங்களை செய்திருக்கக்கூடிய நெல்சன் மண்டேலாவின் பெயரை தன்னுடைய மகனுக்கு சூட்டியிருப்பது எத்தகைய நாட்டுப்பற்றை, அந்த தியாக உணர்வை, அவர் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்த ஓராண்டு திமுக ஆட்சியில், நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பரிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை. இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம். அதாவது நான் புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். ஆக இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைத்து அந்தப் பெண்கள் அதை என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்றால், அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பெண்கள் சேமிக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் நான் புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி,  திமுக ஆட்சியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.

அந்த ஆட்சிக்கு பக்க பலமாக தாம்பரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை நம்முடைய எஸ்.ஆர்.ராஜா  நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவருடைய இல்லத்தில் அவருடைய குடும்ப விளக்குக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதிலே உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய, வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து நம்முடைய மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கக்கூடியவர்களாக உங்கள் வாழ்க்கையை நடத்திக் காட்டவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் உரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com