புதுச்சேரியில்  சூனியம் போக்குவதாக கூறி சாமியார் வேடத்தில் பெண்ணிடம் நகை, பணம் கொள்ளை

புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகைகள் மற்றும் பணத்தை சாமியார் வேடத்தில் வந்த இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காவி வேட்டி அணிந்த கும்பல் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். 
புதுச்சேரியில் காவி வேட்டி அணிந்த கும்பல் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். 

புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகைகள் மற்றும் பணத்தை சாமியார் வேடத்தில் வந்த இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (43). கணவரை இழந்த இவர் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் அங்கு வந்தனர். குறி கூறுவது போல் வந்த அவர்கள், லட்சுமிக்கு காலில் அடிபட்டதை கூறி, உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர், அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் உள்ள தங்க நகைகளை மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளனர். 

இதை நம்பிய லட்சுமி, தனது கையில் போட்டிருந்த 2 பவுன் வளையல், காதில் அணிந்திருந்த தங்க தோடு ஆகியவற்றை அவர்களிடம் கழற்றி கொடுத்தார். அதன்பின் மூலிகை கலந்த தேங்காய் எண்ணெயை கொடுத்து ரூ.20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர், தன்னிடம் ரூ.8,500 மட்டுமே இருப்பதாகக் கூறி அந்த ஆசாமிகளிடம் கொடுத்துள்ளார்.

இதையெல்லாம் வாங்கிக் கொண்ட அந்த ஆசாமிகள் மந்திரம் சொல்வது போல் நடித்து ஒரு செம்பை கொடுத்து அதில் நகைகள் இருக்கின்றன. நாளை அதை திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றனர்.

இந்தநிலையில் வீட்டுக்கு வந்த மகன் விக்னேஷிடம், நடந்த விவரம்  குறித்து லட்சுமி தெரிவித்தார். உடனே அவர் செம்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் எதுவும் இல்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்கு வந்த மர்ம ஆசாமிகள் சாமியார்போல் நடித்து நகை, பணத்தை பறித்துச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து இவர்கள் மங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் 2 பேர் காவி வேட்டி அணிந்து லட்சுமி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து வில்லியனூர் பகுதியில் காவி வேட்டியுடன் நடமாடிய 8 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஒருவர் லட்சுமியிடம் நூதன முறையில் நகை பறித்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்க்காடு அருகே உள்ள புதுக்குப்பம் பகுதியிலும் இதேபோல் ஒரு பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com