மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி: திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

274 சைவத்தலங்களுள் ஈடுஇணையற்றதாகவும், தென்கயிலாயம், தட்சிணா கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் ஏராளமான பக்தர்கள்.

இத்தனை சிறப்பு மிகுந்த இக் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 6 ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், 7 ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும்,  8 ஆம் தேதி கைலாசபர்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மே 9 ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் செட்டிப்பெண்ணுத்து மருத்துவம் பார்க்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 11 ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரர், யாளி வாகனத்திலும், 12 ஆம் தேதி தங்க குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தர். 

மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது.

மேள, தாளங்கள் முழங்க சிவாச்சார்யார்கள் தேருக்கு முன்பாக சிவன் பாடல்களை பாடியபடி சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதியில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

தேரோட்டத்தைத் தொடா்ந்து மே 14 ஆம் தேதி சனிக்கிழமை காலை நடராஜா் தரிசனம், பகலில் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி, இரவு வெள்ளி ரிஷபக் காட்சி, கொடியிறக்கம், மே 15 ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா, மே 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்சவம், மே 17 ஆம் தேதி இரவு பிச்சாடனாா் திருவீதியுலா, மே 18 ஆம் தேதி இரவு சண்டிகேஸ்வரா் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல இணை ஆணையா் எஸ். செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் த. விஜயராணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com