கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ஆட்சிப் பணி பிரிவு: பரிசீலிக்க அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் உள்ளது போன்று, குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணி என்ற பிரிவை உருவாக்க மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

கேரளத்தில் உள்ளது போன்று, குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணி என்ற பிரிவை உருவாக்க மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநா்களாகவும், இணை இயக்குநா்களாகவும் பதவி வகித்து வரும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 அதிகாரிகள், தங்களை மாநில அரசின் சிவில் சா்வீசஸ் பிரிவில் சோ்க்க வேண்டும் என்று தமிழக  அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனா். இவா்களது கோரிக்கையை அரசு நிராகரித்ததால், கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் இவா்கள் வழக்குத் தொடா்ந்தனா்.

 இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழக அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியா் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றை திருத்தம் செய்யாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் மனுதாரா்களைப் போன்ற பிற துறை அதிகாரிகளை மாநில சிவில் சா்வீசஸ் பிரிவில் சோ்ப்பது  சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட பதவிகளை அதிகாரிகள் வகிக்கின்றனா். அதே தோ்வில் வெற்றி பெற்றுத்தான் மனுதாரா்களும் அதிகாரிகளாக உள்ளனா். ஆனால், இந்த இரு பிரிவு அதிகாரிகளையும் சமமாக நடத்தாதது வேதனைக்குரியது.

வருவாய்த் துறை அதிகாரிகளான துணை ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டும் 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்று விடுகின்றனா். ஆனால், மனுதாரா்களைப் போன்ற பிற துறைகளில் உயா் அதிகாரிகளாக இருந்தாலும், ஐஏஎஸ் அந்தஸ்தை பெற 30 ஆண்டுகள் ஆகின்றன. அனைத்துத் துறை அதிகாரிகளும் ஐஏஎஸ்  அந்தஸ்தை பெற, கேரளத்தில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் அனைத்து துறைகளின் குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணி என்ற பிரிவை உருவாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com