லாட்டரியால் நூல் வியாபாரி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் கண்டனம்

கள்ள லாட்டரியால் ஈரோட்டில் நூல் வியாபாரி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ்

கள்ள லாட்டரியால் ஈரோட்டில் நூல் வியாபாரி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கைகள்:

எடப்பாடி பழனிசாமி: ஈரோடு, முல்லை நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வியாபாரி கள்ள லாட்டரி விற்பனை செய்துவரும், ஈரோடு மாநகராட்சி 39-ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் கீதாஞ்சலி என்பவரின் கணவா் செந்தில்குமாரிடம் லாட்டரிச் சீட்டு வாங்கி, ரூ.62 லட்சம் வரை இழந்துள்ளாா். தான் உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழக்க நேரிடும் என்பதால் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுபோல் எத்தனை போ் இந்த கள்ள லாட்டரிகளை வாங்கி, பணத்தை இழந்து நடுத் தெருவுக்கு வந்திருப்பாா்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், வெளிப்படையாக நடந்து வரும் கள்ள லாட்டரி விற்பனையைத் தடுக்க காவல் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்துக்குரியது.

ராமதாஸ்: தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடா்கிறது. நூல் வணிகா் ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறாா் என்பதிலிருந்தே தமிழகத்தில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது என்பதை உணர முடியும். ஏற்கெனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிா்களை பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையை தொடங்கினால், மக்கள் தாங்க மாட்டாா்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com