கருணாநிதி வழியில் உழைத்திடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கருணாநிதி வழியில் உழைத்திடுவோம் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வழியில் உழைத்திடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கருணாநிதி வழியில் உழைத்திடுவோம் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பத்தாண்டுகால இருளை விரட்டி, புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயர்வான திட்டங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்கள, அரசின் அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்தும் அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பு, அவற்றின் மீதான கண்காணிப்பு என இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். 

‘ஓயாத உழைப்பின் ஓராண்டு’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவின் சார்பில் ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஓராண்டுக்கு முன்பு, தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக இருந்ததால் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையோ, வெற்றிவிழா மாநாட்டினையோ நடத்திட இயலவில்லை. ஓராண்டு காலத்தில் கரோனா இரண்டாவது அலை - மூன்றாவது அலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியதுடன், அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் புரிந்த மனநிறைவோடு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வாக, இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்துள்ளன.
ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பேராதரவுடனும் பங்கேற்புடனும் நடந்து வருவது குறித்த தகவல்கள், உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகம் தருவதுடன், மேலும் உழைத்திட ஊக்கம் அளிக்கிறது. மே 18-ஆம் நாளன்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் உங்களை நேரில் காணலாம் என்ற பேராவல் கொண்டிருந்தேன். திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு அதற்கான முன்னேற்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டார். பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தள்ளிப் போடப்பட்டாலும், உங்களை நான் சந்திக்க வருவதை இயற்கையாலும் நிச்சயம் தடுத்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்திப்பதும், அவர்களின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதும் எப்போதும்  தொடரும். ஓராண்டு காலத்தில் வெளிப்படுத்தி வரும் உழைப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, ஓராயிரம் சாதனைகளை நிகழ்த்திட முடியும் என உறுதியுடன் நம்புகிறேன். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் விரைவில் பங்கேற்கவிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, திமுகவின் சார்பிலான நிகழ்வுகளிலும் உங்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன். கருணாநிதி வழியில் உழைத்திடுவோம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்திடுவோம். அதனால் மக்கள் பெறும் பயன்களை எத்திசையும் முழங்கிடுவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com