மணப்பாறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் இன்று நடைபெற்றது.
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால் திருவிழா நடைபெறவில்லை. 


மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருக்கோயில்.

இந்நிலையில், நிகழாண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் சிறப்பு வாய்ந்த பால்குடவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்ச்சையாக நடைபெற்று வருகிறது.
 
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பாலுசாமி நாயுடு மற்றும் நல்லுச்சாமி நாயுடு வகையறா மண்டகப்படியின்படி, கோயில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் ஆலய பால்குடங்கள் புறப்பட்டு மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்ற அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 

ஆலய பால்குடம்

அதனைத்தொடர்ந்து மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் குழந்தை வரம்வேண்டியவர்கள் குழந்தை பாக்கியம் அடைந்ததால் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பால்குடம் எடுத்த திருநங்கைகள்

காலை 6 மணிக்கு தொடங்கிய பால்குட ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பால்குடங்களும் கோவிலுக்கு வந்தடைந்தபின் சுமார் 3 லட்சம் லிட்டர் பாலால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படவுள்ளது. 

பக்தர்களுக்கு காப்புகளைய உதவும் காவல்துறையினர்

திருவிழாவையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பறை அறங்காவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com