கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 
கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி இரவு நேரத்தில் கல்குவாரி செயல்பட்டதாலேயே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தி இருந்தால் தொழிலாளர்களை உயிருடன் மீட்டிருக்கலாம். 

ஆனால் விபத்து ஏற்பட்டு பல மணி நேரமாகியும் மீட்பு பணியை துரிதப்படுத்தாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டனர். தொழிலாளர்களின் உயிருடன் விளையாடிய அரசு அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கல் குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதுகாப்பு இல்லாத இடத்தில் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.

வறுமை காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் உயிரையும் துச்சமென கருதி இது போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

ஆனால் கல் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இத்தகைய ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். 

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com