மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை: கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை: கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடைபெறும் இரண்டு நாள் ( மே 16, 17) வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஜவுளித் தொழில்தான்.  பனியன், விசைத்தறி, கைத்தறி என ஜவுளித்தொழிலை நம்பி ஒரு கோடி பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். இந்த அனைத்து தொழில்களும் பஞ்சு மற்றும் நூலின் அதீத விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்த நெருக்கடிக்கு மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம். இந்திய பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதனை தொழில் துறையினருக்கு சரியான விலையில் வழங்கிட வேண்டும். ஆனால், 2021 ஆம் ஆண்டில், இந்திய பருத்தி கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பாஜக அரசு தடுத்துவிட்டது.

இதனால், பன்னாட்டு/உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், ஆன்லைன் ஊக வர்த்தக நிறுவனங்களும் பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள். இதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு காரணமாகும்.

2020 ஆம் ஆண்டு வரையில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரகங்களுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் இப்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ. 95 ஆயிரம் முதல் ரூ.1.05 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக நூல் விலையும் உயர்ந்துள்ளது.

எனவே, மத்திய அரசு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இந்திய பருத்தி கழகம் மூலம் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து வருடம் முழுவதும் பஞ்சாலைகளுக்கு சரியான விலையில் தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சு கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

திருப்பூரில் சிபிஐ(எம்) உண்ணாவிரதம்: இந்தியாவின் மொத்த நூல் உற்பத்தியில் 40 சதவீதத்தை தமிழகம் பூர்த்தி செய்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தேவையான 116 லட்சம் பஞ்சு பேலில் 6 லட்சம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது. எனவே தமிழ்நாட்டிற்கான பஞ்சு தேவையை நிறைவு செய்திட தமிழ்நாடு பருத்தி கழகம் என்ற தனி நிறுவனத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளித்தொழிலை பாதுகாக்க அனைத்து ஜவுளி உற்பத்தியாளர் அமைப்புகள் மே 16, 17 ஆகிய தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

ஜவுளித் தொழிலை பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நாளை (17.05.2022) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com