24 மணி நேரமும் ஆக்சிஜன் செறிவூட்டியால் சுவாசிக்கும் சுவேதா
24 மணி நேரமும் ஆக்சிஜன் செறிவூட்டியால் சுவாசிக்கும் சுவேதா

ஓராண்டாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்: மருத்துவ உதவி கோரும் உறவினர்கள்

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீரல் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1800 செலவு செய்து ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் அவரது உறவினர்கள். 

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீரல் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1800 செலவு செய்து ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் அவரது உறவினர்கள். 

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா(19). இவர் தன்னுடைய பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த இவர், கல்லூரியில் படிக்க முயற்சி செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டுவடம் வளைந்ததால், நுரையீரல் சுருங்கிவிட்டதாகவும், இனிமேல் மூச்சுத்தினறல் அதிகம் இருக்கும் என்பதால் அவருக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து சுவேதாவை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினர்கள், வீட்டிலிருந்தபடியே அவருக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை தினமும் ரூ.1800 செலவு செய்து, வாடகைக்கு எடுத்து அவர் சுவாசிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சுவேதாவின் உறவினர் பிரதீபா, சுதா ஆகியோர் கூறுகையில், சுவேதா ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது, தாய் - தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சுவேதாவை அவரது பெரியப்பா கூத்தபெருமாள் இங்கு கொண்டு வந்து வளர்த்தார். பிளஸ் டூ வரை தஞ்சாவூரில் உள்ள தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார்.

கல்லூரிப் படிப்பை தொடங்க இருந்த நேரத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுவேதாவுக்கு நுரையீரல் சுருங்கிவிட்டதாகவும், இனி சுவாசிக்க வேண்டுமானால் ஆக்சிஜன் மூலமாகத்தான் சுவாசிக்க முடியும் என கூறிவிட்டனர்.

ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தினசரி வாடகைக்கு அமர்த்தி சுவேதாவுக்கு கொடுத்து வருகிறோம். 24 மணி நேரமும் இந்த ஆக்சிஜன் மூலம்தான் அவர் மூச்சு விடுகிறார். ஆக்சிஜன் இல்லையென்றால் அவர் பெரும் சிரமப்படுகிறார். நாங்கள் விவசாயம் செய்து வருவதால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோம். 

சுவேதாவுக்கு  பாண்டிசேரிக்குச் சென்று  அதற்குரிய உயர்தர சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com