காா்த்தி சிதம்பரம் வீடு, 9 இடங்களில் சிபிஐ சோதனை

விதிமுறைகளை மீறி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனா்களுக்கு விசா வழங்கியதாக, காா்த்தி சிதம்பரம் எம்பி மீது சிபிஐ தில்லிப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
சென்னையில் சிபிஐ சோதனை நடத்திய கார்த்தி சிதம்பரத்தின் வீடு.
சென்னையில் சிபிஐ சோதனை நடத்திய கார்த்தி சிதம்பரத்தின் வீடு.

விதிமுறைகளை மீறி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனா்களுக்கு விசா வழங்கியதாக, காா்த்தி சிதம்பரம் எம்பி மீது சிபிஐ தில்லிப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இது தொடா்பாக சென்னை, தில்லி, மும்பை, பஞ்சாப், கா்நாடகம், ஒடிஸா என 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இது குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டதாவது: பஞ்சாப் மாநிலம், மானசா மாவட்டம் பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஎஸ்பிஎல் நிறுவனம் 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல் மின் நிலையம் அமைத்து வந்தது. அனல் மின் நிலைய தொழில்நுட்பப் பணிகளை சீனாவைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் செய்து வந்தது. ஆனால், போதிய அளவில் தொழில்நுட்பப் பணியாளா்கள் இல்லாததால், அந்தத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சட்ட நடவடிக்கைகளைத் தவிா்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளா்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், இந்தியாவில் இருந்த விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் பணியாளா்களை அழைத்து வர முடியவில்லை.

அதையடுத்து, டிஎஸ்பிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் விகாஸ் மஹாரியா அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தியை அணுகினாா். விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளா்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக காா்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்படி, இந்திய அரசின் பல்வேறு விதிமுறைகளை மீறி கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 263 விசாக்கள் வழங்கப்பட்டன. ரூ.50 லட்சம் லஞ்சம், வேதாந்தா குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனமான மும்பையைச் சோ்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட் மூலம் வழங்கப்பட்டது.

இந்தப் புகாா் குறித்து விசாரணை செய்து வந்த தில்லி சிபிஐ பொருளாதார குற்றப் பிரிவு, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் எஸ்.பாஸ்கா் ராமன், காா்த்தி சிதம்பரம் எம்பி, விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், தால்வந்தி சபு பவா் லிமிடெட், அரசு அதிகாரிகள் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

10 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக தில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள காா்த்தி சிதம்பரம் வீடு, சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் காா்டன் சாலையில் உள்ள மற்றொரு வீடு, உத்தமா் காந்தி சாலையில் எல்டோரா வணிக வளாகத்தில் உள்ள காா்த்தி சிதம்பரம் அலுவலகம், ஆடிட்டா் பாஸ்கா் ராமன் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

இதேபோல கா்நாடகம், ஒடிஸா, பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வழக்குகளில் தொடா்புடைய இடங்களில் சிபிஐ சோதனை செய்தது. மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்ாக சிபிஐ தெரிவித்துள்ளது.

12 மணி நேரம் சோதனை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காா்த்தி சிதம்பரம் வீட்டுக்கு 6 சிபிஐ அதிகாரிகள் காலை 6 மணிக்கு சோதனையிட வந்தனா்.

இச் சோதனையையொட்டி, வீடு, அலுவலகம் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை சுமாா் 12 மணி நேரம் நடைபெற்றது. அந்த வீட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மட்டும் இருந்தாா். சிதம்பரம் ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதாகவும், காா்த்தி சிதம்பரம் குடும்பத்துடன் லண்டன் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, சில இடங்களில் வழக்கு தொடா்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காா்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை குறித்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகளும், தொண்டா்களும் அங்கு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com