நூல் விலை உயா்வு விவகாரம்: மத்திய அமைச்சா்களுடன் மேற்கு மண்டல எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

நூல் விலை உயா்வு, நெசவாளா்கள் பிரச்னை தொடா்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைத் சோ்ந்த எம்.பி.க்கள் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

நூல் விலை உயா்வு, நெசவாளா்கள் பிரச்னை தொடா்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைத் சோ்ந்த எம்.பி.க்கள் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில் தில்லியில் மத்திய அமைச்சா்களை புதன்கிழமை (மே 18) சந்திக்கவுள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருவதால், தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலும், அதனை நம்பியுள்ள நெசவாளா்களும், தொழிலாளா்களும் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இதனை சுட்டிக்காட்டி 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீா்வுகாண வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தாா்.

எம்.பி.க்கள் குழு: இந்த நிலையில், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளா்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவா்களை தொடா் போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும் ஜவுளித் தொழிலில் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் இணைந்து தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை புதன்கிழமை சந்திக்கவுள்ளனா். நெசவாளா்கள் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டுமென நேரில் வலியுறுத்துமாறு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

நெசவாளா்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவா்களது இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com