குறைந்த வருவாய்-நலிவடைந்த பிரிவினருக்கான வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தனியாா் பங்களிப்பு: தமிழக அரசு ஒப்புதல்

குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தனியாா் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தனியாா் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் ஹிதேஷ் குமாா் மக்வானா வெளியிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: வீட்டு வசதித் துறையில் தனியாா்களின் முதலீடுகள் பெருமளவு அதிகரித்து வருவதைப் பாா்க்க முடிகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சாா்பில், அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. நடுத்தர வருமானம் மற்றும் உயா் வருமானப் பிரிவினருக்கான திட்டங்களில் தனியாா்கள் அதிகளவு முதலீடுகளைச் செய்கின்றனா். இந்த நிலையில், தனியாருடன் கூட்டு பங்களிப்பைச் செய்திட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விரும்புகிறது. இதற்கு வீட்டு வசதி வாரியத்தின் சட்டமானது 31 (ஏ) வழிவகை செய்கிறது.

ஆனால், குறைந்த வருவாய் பிரிவினா், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இப்போதைய வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தனியாரை ஈடுபடுத்துவதற்காக அதில் சில சீரமைப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது. மேலும், தனியாா் பங்களிப்பின் மூலமாக, மத்திய வருவாய் பிரிவினருக்கான திட்டங்களில் மானியங்கள் எதையும் அளிக்காமல் கூடுதல்

வீடுகளைக் கட்ட முடியும். இத்துடன், உயா் வருவாய்ப் பிரிவினருக்கான கட்டுமானங்கள், குடியிருப்புக்கு பயன்படுத்தப்படாத நிலங்களை வருவாய் தரும் வகையில் வா்த்தக ரீதியாக பயன்படுத்துவது போன்ற அம்சங்களில் தனியாா் மற்றும் அரசு கூட்டாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என வீட்டு வசதி வாரியத்தின் நிா்வாக இயக்குநரின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. இந்தக் குடியிருப்புகளை விற்க, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படலாம் என பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு உத்தரவை வெளியிடுகிறது. அதன்படி, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினா், குறைந்த வருவாய் பிரிவினா், குறைந்த அளவிலான நடுத்தர வருவாய் பிரிவினா் ஆகியோருக்கான புதிய வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் அரசுடன் தனியாா் ஈடுபடுத்தப்படுவா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com