ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன? தமிழக நிதியமைச்சர் விளக்கம்

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளைக் கட்டாயபடுத்த முடியாது என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “உச்சநீதிமன்ற தீர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை நீதியரசர் தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இருக்கும் வரி விதிக்கும் உரிமைகளை மீறி நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. சட்டப்படி ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு பரிந்துரை வழங்கும் அமைப்பு மட்டுமே. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளை மாநிலங்களுக்கு அனுப்ப மட்டுமே முடியுமோ தவிர அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கட்டாயப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உரிமை கிடையாது” எனத் தெரிவித்தார்.

மேலும், “மாநிலத்திற்கும், ஒன்றியத்திற்கும் அரசமைப்பு வழங்கியிருக்கும் உரிமைகளை ஜிஎஸ்டி கவுன்சிலால் மீற முடியாது என மிக விளக்கமாக நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது. நேற்றைய பேரறிவாளன் விடுதலை தீர்ப்பும், இன்றைக்கு வெளியான தீர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அமைச்சரவையின் அதிகாரமும், ஆளுநரின் அதிகாரமும் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

பல வகைகளில் மாநிலங்களின் உரிமைகளை குறைக்கும் வகையில் கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசின் செயலும், ஆளுநரின் செயலும் இருந்த சூழலில் அடுத்தடுத்த இரு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் மாநில சட்டப்பேரவையின் உரிமைகளை அரசமைப்பின்படி செல்லும் என உத்தரவிட்டது திருப்புமுனை வாய்ந்தது. கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து நாட்டின் கவனத்தையே முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பியிருக்கிறார்” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com