அரசு திட்டங்களின் நோக்கங்கள் சிதையாமல் நிறைவேற்றுவதே மிகப்பெரும் சவால்

அரசு திட்டங்களின் நோக்கங்கள் சிதையாமல் நிறைவேற்றுவதே மிகப்பெரிய சவால் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
அரசு திட்டங்களின் நோக்கங்கள் சிதையாமல் நிறைவேற்றுவதே மிகப்பெரும் சவால்

அரசு திட்டங்களின் நோக்கங்கள் சிதையாமல் நிறைவேற்றுவதே மிகப்பெரிய சவால் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

மாநில அளவிலான வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

ஆட்சி அமைந்த போது, இது எனது அரசு அல்ல. நமது அரசு என்று குறிப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு அனைவரும் ஆலோசிக்கிறோம். நான் முதல்வா் மற்றும் எனது அமைச்சரவையில் 33 போ் இருக்கிறாா்கள். அதனால், எங்களால் மட்டுமே அனைத்தும் செயல்படுகிறது எனக் கூற மாட்டேன். பலரது சிந்தனையின் கூட்டுச் சோ்க்கைதான் அரசு. அப்படிச் செயல்பட்டால்தான் அது மக்கள் அரசாக இருக்க முடியும். அந்த வகையில், பல்வேறு ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவா்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு திட்டங்கள்: மத்திய, மாநில அரசுகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், திட்டங்களின் செயலாக்கம், நிதிப் பயன்பாடு, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்களை கவனிக்கவும், கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் பயன்பாட்டினை உயா்த்துவதே குழுவின் நோக்கமாகும்.

எல்லோருக்கும் எல்லாம்: எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசின் நோக்கமாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் அனைத்துத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். மருத்துவம், கல்வி, இளைஞா் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர-சிறு தொழில்கள், நெசவாளா் மற்றும் மீனவா் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோட்டையில் தீட்டப்படக் கூடிய திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. திட்டங்கள் தீட்டுவதை விட முக்கியமானது அந்தத் திட்டங்கள், அதனுடைய பயன்கள், அதனுடைய நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான். அதுதான் நமக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய சவாலாகும்.

41 திட்டங்கள் ஆய்வு: மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலமாக செயல்படுத்தக் கூடிய 41 திட்டங்களை மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும். இப்போதைய கூட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், சுய உதவிக் குழுக்களின் திட்டங்களை உள்ளடக்கிய மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் இயக்கம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இப்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.

இதுபோன்ற திட்டங்கள் மட்டுமல்ல, எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய நிறை, குறைகள் குறித்து தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படிச் செய்து வந்தாலே, அந்த்த திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறி விடும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எந்தத் திட்டமும் முறையாக செயல்படாது. இதனைத் துறைத் தலைவா்கள், அரசு அதிகாரிகள் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களின் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் நிலையான வளா்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், எம்.பி.,க்கள் டி.ஆா்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆா்.நடராஜன், சு.திருநாவுக்கரசா், தொல் திருமாவளவன், ப.ரவீந்திரநாத் குமாா், கே.நவாஸ்கனி, ஆா்.எஸ். பாரதி, ஏ.நவநீதகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் வி.ஜி.ராஜேந்திரன், என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், ஜெ.எம்.ஹெச்.அசன் மெளலானா, கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com