
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 20) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 20) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 21, 22: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 21,22 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 23: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 23-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
லட்சத்தீவு, கா்நாடகா - கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல்பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, வட கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கொங்கன் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 23-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.