வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற “உதகை 200" துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய உரை, திமுக அரசு அமைந்த பிறகு, இந்த ஓராண்டு காலத்தில், இந்த நீலகிரி மாவட்டத்ற்கு எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது. இயற்கை வளம் கொண்ட இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உங்களுக்கு இந்த அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
இயற்கையும், மனிதனும் இயைந்து வாழும் இந்த வனப்பகுதிகளைப் பாதுகாக்க இங்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய வனப்பரப்பைப்
பெருக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதாவது தற்போது இருக்கும் வனப்பரப்பை 20.27 விழுக்காட்டிலிருந்து, 33 விழுக்காடாக உயர்த்த, நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நாம் தெரிவித்திருக்கிறோம்.
நமது மாநிலத்தின் வனப்பகுதிகளைப் பெருக்குவதோடு, வன விலங்கு காப்பகங்களைப் பராமரிக்கவும் அரசு கவனம் செலுத்தும். அந்த வகையில், முதுமலையில் இருக்கக்கூடிய புலிகள் காப்பகத்தில் இருக்கின்ற தெப்பக்காடு யானைகள் முகாமில், அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
தெப்பக்காடு யானைகள் முகாம், அது நூற்றாண்டு பழமையானது மட்டுமல்ல, ஆசியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட முகாம் இது. இங்கே
யானைகள் தொடர்பான மிக அதிக விவரங்கள், ஆய்வாளர்களால் சேகரிக்கப்படுகிறது. வளர்ப்பு யானைகள் தொடர்பான அறிவியல்பூர்வமான
தகவல்களைப் பெறுவதற்கு இந்த மையம் ஒரு மிகச்சிறந்த இடமாக இது விளங்கிக் கொண்டு இருக்கிறது.
நமது காட்டு வளங்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அந்நிய களைத்தாவரங்களை அழித்தாக
வேண்டும். இது உள்ளூர்த் தாவர இனங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதோடு, மாநிலத்தின் பல்லுயிர்ப் பன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
அந்நிய களைத் தாவரங்களை அகற்ற இந்த அரசால் ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் நமது வனப்பகுதிகளின் தன்மை முறையாக பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

நீலகிரி மாவட்டப் பகுதி உழவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள நம்முடைய அரசு திட்டமிட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு உள்ளூர் உழவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மையம் அமைக்கவும் நமது அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மையம், மாவட்டத்தில் உள்ள இலட்சக்கணக்கான உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் பழவகைகள், காய்கறிகள், தேயிலை, காபி, நறுமணப் பொருட்கள், பூக்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இந்த மையத்தில் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உழவர்கள் இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே வள மையம் ஒன்றும் அமைக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த மாவட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு
வருகின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சுற்றுலா வழிகாட்டிகள் (டூரிஸ்ட் கைடு), குதிரை சவாரி கூட்டிச் செல்பவர்களாக, சிறு உணவகங்களில்
வேலை செய்பவர்களாக, வாடகை கார் ஓட்டுபவர்களாக, சிறு வியாபாரிகளாக எனச் சுற்றுலா சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை தான் இந்த அரசு முறையாக கணக்கெடுத்து, அவர்களுக்கெல்லாம் அடையாள அட்டைகள் வழங்கி தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்த்து, அந்த வாரியத்தின் அனைத்து வகையான நலத்திட்டங்களையும் பெற வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு
நான் இந்த விழாவில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு இந்த அரசு முதன்முறையாக, உதகமண்டலம், குந்தா, குன்னூர், கோத்தகிரி,
கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் அடங்கிய நீலகிரி மண்டல திட்டப் பகுதியை இந்த அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான மண்டலத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் இப்பொழுது நடந்து கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பாதுகாப்பது என்பது தமிழகத்தின் இயற்கையைப் பாதுகாப்பது சமம்! தமிழகத்தின் வனத்தை பாதுகாப்பது!
தமிழகத்தின் அழகைப் போற்றுவது!
மலைகளும், மலைகள் சார்ந்த இடங்களும் கொண்ட நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும்!
மலைகளோடு சேர்ந்து இந்த மக்களையும் கழக அரசு நிச்சயம் காக்கும்!
அனைத்து உயிர்களையும் காக்கக்கூடிய அரசு இந்த அரசு.
பல்லுயிர் காக்கும் அரசு இந்த அரசு.
சுற்றுச் சூழலைக் காக்கும் அரசு இந்த அரசு.
வளர்ச்சி என்பது அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக
இருக்க வேண்டும். எந்த உயிர்களையும் பாதிக்காத வளர்ச்சியாக இருக்க
வேண்டும் என்று நினைக்கும் அரசு இந்த அரசு.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று சொன்ன
வள்ளலாரின் அறநெறியை ஆட்சி நெறியாகக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரசு,
"திராவிட மாடல்" என்று நான் சொல்வதற்குள் அனைத்து மானுடத் தத்துவங்களும் இதில் அடங்கியிருக்கிறது.
"சுயமரியாதைக்காரன் என்றால் அவனுக்கு இயற்கை மனிதன் என்று பொருள்" இதைச் சொன்னவர் பெரியார்.
அத்தகைய இயற்கையை எந்நாளும் காக்கும் அரசாக நம்முடைய தமிழக அரசு செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com