கூத்தாநல்லூர்: வெண்ணாற்றையே மறைத்த வெங்காயத் தாமரை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெண்ணாறே மறைந்து போகும் அளவிற்கு, வெங்காயத்தாமரை வளர்ந்துள்ளதால், தொடர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
கூத்தாநல்லூர்: வெண்ணாற்றையே மறைத்த வெங்காயத் தாமரை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெண்ணாறே மறைந்து போகும் அளவிற்கு, வெங்காயத்தாமரை வளர்ந்துள்ளதால், தொடர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில், பாமணி, கோரையாறு, வெண்ணாறு என 3 கிளை ஆறுகளாகப் பிரிகிறது. நீடாமங்கலம் ஒளிமதி கிராமம் வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனப் பிரிகிறது. அதைத் தொடர்ந்து, அத்திக்கடை, வாழச்சேரி எனும் இடத்தில் வெண்ணாறு, வெள்ளியாறு என இரண்டாகப் பிரிகிறது. 

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாகச் சென்று, அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து செல்கிறது. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து, பாசனத்துக்குச் செல்கின்றது. இந்நிலையில், வெண்ணாறே தெரியாத அளவுக்கு வெங்காயத்தாமரைச் செடிகள் மண்டியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சமீர் கூறியது,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 10 தேதிக்குள் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், இந்தாண்டு மே 24ஆம் தேதியே திறக்கப்படுகிறது. அதற்காக கூத்தாநல்லூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெண்ணாற்றில் பல மாதங்களாக வெங்காயத் தாமரைச் செடிகள் வளர்ந்து ஆற்றையே மறைத்துள்ளது. 

மேலும்,மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், இப்பகுதிக்கு வருவதற்குள், ஆற்றில் மண்டியுள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்றிட வேண்டும். அப்போதுதான், ஆற்றுத் தண்ணீர் கடைமடை வரை விவசாயத்திற்குச் செல்லும். விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும், கூத்தாநல்லூர் பாய்க்காரப் பாலம் மற்றும் அருகில் உள்ள பழமையான இரும்பு பாலத்திலும் கீழ் பகுதியில் தேங்கியுள்ளது. இதனால், மிகப் பழமையான பாலமான பாய்க்காரப் பாலமும் சேதம் அடையக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பாலத்தின் வழியாக பயத்துடன்தான் சென்று வருகின்றனர். மேலும், கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு அசுத்தங்கள் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றார். இதேபோல், லெட்சுமாங்குடி பாலத்தில் குவிந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகள் அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.சிவதாஸ் கூறியது. 

வெண்ணாற்றின் முதன்மை பாசன கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. ஆனால், வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் பல மாதங்களாக வளர்ந்து, தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளது. இப்படியிருந்தால் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடைக்குச் செல்ல முடியாத நிலைதான் ஏற்படும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தி, பொதுப்பணித் துறை அதிகாரியிடம் தெரிவித்தால், நகராட்சி நிர்வாகம்தான் அகற்ற வேண்டும் என்கின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால், பொதுப்பணித் துறையினர்தான் அள்ள வேண்டும் எனச் சொல்கின்றனர். இரு துறையும் போட்டிப்போட்டுக் கொண்டு வெண்ணாற்றையே, வெங்காயத்தாமரையால் மறையும் அளவிற்கு மாற்றி விட்டனர். மாவட்ட ஆட்சியர் உடனே நேரில் பார்வையிட்டு, இப்பகுதிக்குத் தண்ணீர் வருவதற்குள் போர்க்கால அடிப்படையில், ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com