காதல் திருமணம் செய்தவரின் குடும்பத்தை ஒதுக்கிய கிராமம்: 9 போ் மீது வழக்குப் பதிவு

மண்ணச்சநல்லூா் அருகே காதல் திருமணம் செய்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு குடும்பத்தினா் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரச்னையில் 9 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மண்ணச்சநல்லூா் அருகே காதல் திருமணம் செய்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு குடும்பத்தினா் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரச்னையில் 9 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மனைவி செல்ல பாப்பா(வயது 60) இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர்.
கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் தனது மகன் ரமேஷ் உடன் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகனான ஜெகதீசன்(வயது 41) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த கோமதி(வயது 33) பெண்ணுடன் காதல் வயப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ராஜேஷ், வனிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒரே சாதியை (முத்தரையர்) சேர்ந்தவர்கள் என்றாலும் ஊர் மக்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த ஊர் குடி பாட்டு கோயிலான மாசி பெரியண்ணசாமி கோவில் திருவிழா சமயத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூர் முக்கியஸ்தர்கள் வசூல் செய்வதை தவிர்த்தனர்.

ரமேஷ் குடும்பத்தினர் நேரில் சென்று முக்கியஸ்தர்களிடம் முறையிட்டும் வரிவசூல் செய்யப்படவில்லை. இதனையடுத்து ரமேஷ் சிறுகனூர் காவல் நிலையத்தில் கடந்த 15ம் தேதி  புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் முக்கியஸ்தர்கள் தங்கள் கருத்தில் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. 

தற்போது நடைபெற்று வரும் மாசி பெரியண்ணசாமி, ஸ்ரீகாமாட்சி, அம்மன்பெரும்பூஜை விழாவிற்கு ரமேஷ் இடமிருந்து குடி பாட்டு வரி வாங்க முக்கியஸ்தர்கள் மறுத்துவிட்டனர். இந்த சூழலில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊர் முக்கியஸ்தர்கள் சின்னச்சாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து பேசிய ரமேஷ்,

120 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் வழிபாடு எங்களுக்கும் உரிமை உள்ளது. எனது தம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற ஒரே காரணத்தினால் கோவில் விழாவில் பங்கேற்க எங்களை அனுமதிக்கவில்லை. எனவே காவல்துறை எங்களுக்கு உரிய வழிபாடு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றார். 

அவரது தாய் செல்ல பாப்பா பேசுகையில்,

ஆண்டாண்டு காலமாய் தலைமுறை தலைமுறையாய் இந்த கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறோம். வழிபாடு நடத்த எங்களை அனுமதிக்காததால் வேண்டுதல்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. குடி பாட்டு வரி செலுத்த தயாராக உள்ளோம், மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவைப் பெற்று தர வேண்டுமென கண்ணீர் மல்க கூறினார்.

இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய மனித உரிமை கட்சி பொதுச்செயலாளர் குபேரன்பேர் கூறுகையில்,

காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே வகுப்பைச் சார்ந்தவர்கள். ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் திருமணம் செய்துகொண்ட  குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் அவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. மன ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வயல்வெளியில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 

பொது இடத்தில் மிரட்டல் விடுத்து இழிவாக பேசி வருகிறார்கள். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் 9 பேர் மீதும் குடியியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 103, 110, 506 ( 2 ) 294 (B) ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவில் மனமொத்த இருவர் திருமண வயது நிரம்பியவராக இருந்தால் அவர்கள் எந்த மதத்திலும்,  எந்த ஜாதியிலும் திருமணம் செய்து கொள்ளத் தடை இல்லை என்கிறது சட்டம். ஆனால் எதுமலை விவகாரத்தில் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் சக மனிதனின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. எனவே சட்ட ரீதியாக இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com