மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி? - ஜெயக்குமார் பதில்!

மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடுவது குறித்து கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
ஜெயக்குமார்(கோப்புப்படம்)
ஜெயக்குமார்(கோப்புப்படம்)

மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடுவது குறித்து கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சி.பா. ஆதித்தனாரின் 41 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது, 'மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சி எந்த பணி கொடுத்தாலும் செய்வேன். 

திமுக போல அதிமுக ஒன்றும் சர்வாதிகார கட்சி கிடையாது. ஜனநாயகம் மலர்ந்துள்ள இயக்கம் அதிமுக. கருத்து ஒருமித்தலுக்காக யாருடைய மனமும் புண்படாதபடி முடிவு எடுக்கப்படும்' என்றார். 

மேலும், 'கருத்து சுதந்திரம் குறித்து திமுக அரசு பேசிவிட்டு இப்போது அவர்களின் அரசுக்கு எதிராகப் பேசினால் வழக்கு போடுகிறார்கள். திமுகவுக்கு எதிராகப் பேசினாலே ஜெயில்தான். 

அதுபோல பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது மத்திய அரசு விலையைக் குறைத்தும் திமுக அரசு விலையைக் குறைக்க மறுக்கிறது. மத்திய அரசு மீது பழி போட்டுத் தப்பிக்கிறது. வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு இப்போது ஏன் பின்வாங்குகிறார்கள்? 

மாநில அரசின் வருவாயைப் பெருக்க 5 பேர் கொண்ட பொருளாதாரக் குழுவை அமைத்தார்கள். ஆனால், அவர்கள் இதுவரை என்ன அறிக்கை கொடுத்துள்ளார்கள்? 

தமிழகத்தில் 20 நாள்களில் 18 கொலைகள் நடந்துள்ளது. இது தலைநகரமா அல்லது கொலை நகரமா என்று தெரியவில்லை. திமுக அரசில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com