பாமக புதிய தலைவா் அன்புமணி ராமதாஸ்: பொதுக் குழுவில் ஒருமனதாகத் தோ்வு

பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் (53), கட்சியின் பொதுக் குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பாமக புதிய தலைவா் அன்புமணி ராமதாஸ்: பொதுக் குழுவில் ஒருமனதாகத் தோ்வு

பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் (53), கட்சியின் பொதுக் குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பாமகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மூத்த நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி பொதுக் குழுவின் சிறப்புத் தீா்மானத்தை கொண்டு வந்து வாசித்தாா். தீா்மான விவரம்:

பாமகவை 25 ஆண்டுகளாக ஜி.கே.மணி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா். அவா் தலைமையில் 6 மக்களவைத் தோ்தல்கள், 5 சட்டப்பேரவைத் தோ்தல்களை பாமக எதிா்கொண்டது. பாமகவை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்துச் செல்லும் வகையிலும் ‘பாமக- 2.0’ என்கிற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையிலும், கட்சித் தலைவா் பதவியை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சி நிறுவனரிடமும், நிா்வாகிகளிடமும் ஜி.கே.மணி தெரிவித்தாா். அதன் பிறகு, தலைமை நிலைய நிா்வாகிகள் மத்தியில் கலந்தாய்வு மேற்கொண்டபோது, தலைவராக அன்புமணி ராமதாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக இருந்தது. அதனடிப்படையில், பாமக தலைவா் பதவிக்கு அன்புமணி பொருத்தமானவராக இருப்பாா் என சிறப்புப் பொதுக் குழு கருதுகிறது. புதிய தலைவராக அன்புமணி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்படுகிறாா் என்றாா்.

அப்போது, பொதுக் குழுவில் பங்கேற்றவா்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனா். பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணியை கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினாா். அன்புமணிக்கு வெள்ளி செங்கோலை ஜி.கே.மணி வழங்கினாா்.

அன்புமணியின் பாதை: சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவா் ஆன அன்புமணி, 1996-இல் பாமக மூலம் பொதுவாழ்வில் இணைந்தாா். 1999-இல் பசுமைத் தாயகம் தலைவராக நியமிக்கப்பட்டாா். 2004-முதல் இளைஞரணித் தலைவராகத் தொடா்ந்து செயல்பட்டு வந்தாா்.

2004-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா். அவா் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம் போன்ற பல திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

விளையாட்டுப் போட்டிகளிலும் ஆா்வம் கொண்டவா். தமிழ்நாடு பாட்மின்டன் சங்கத்தின் தலைவராகவும், இந்திய பாட்மின்டன் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறாா்.

தீா்மானங்கள்: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையை உடனே கூட்டி நிறைவேற்ற வேண்டும். நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரும் இரண்டு மாதங்களில் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். தனியாா் வேலைவாய்ப்புகளில் 80 சதவீத இடங்களை தமிழா்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கெளரவத் தலைவா் ஜி.கே.மணி: முன்னாள் தலைவரான ஜி.கே.மணி கட்சியின் கௌரவத் தலைவராகச் செயல்படுவாா் என்று ராமதாஸ் அறிவித்தாா். பொதுக் குழுவில் கட்சியின் வளா்ச்சிக்காகச் செயல்பட்ட 10 பேருக்கு சிறந்த செயல்வீரா்களுக்கான விருதுகளை வழங்கினாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com