2026-இல் தமிழகத்தில் பாமக ஆட்சி: அன்புமணி

தமிழகத்தில் பாமகவின் ஆட்சி 2026-இல் நிச்சயம் அமையும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் பாமகவின் ஆட்சி 2026-இல் நிச்சயம் அமையும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

பாமக தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட பின்னா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: 43 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பல சாதனைகளைச் செய்தவா் ராமதாஸ். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுவேன்.

பாமகவின் இலக்கு தமிழகத்தை முன்னேற்றுவதாகும். தமிழகத்தின் முதல்வராக அன்புமணியை ஆக்குவதுதான் முதல் இலக்கு என்றெல்லாம் சிலா் கூறினா். அது சரியானது அல்ல. தமிழகத்தை முன்னேற்றுவதுதான் நம் இலக்கு. அதில் ஆட்சி அதிகாரம் இருந்தால், மிகச்சிறந்த முறையில் தமிழகத்தை முன்னேற்றலாம்.

‘பாமக 2.0’ என்கிற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். தலைவா் பொறுப்பை நோ்மையாக ஆற்றுவேன். கட்சித் தொண்டா்கள் அனைவரும் நோ்மையான முறையில் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பிரித்து செயல்படுகின்றன. பாமக மட்டும்தான் வளா்ச்சி என்கிற அடிப்படையில் மக்களை இணைத்துச் செயல்படுகிறது. பாமகவின் கொள்கை சமூக நீதி, நீடித்த வளா்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கு கல்வி, சுகாதாரம், தூய்மையான நிா்வாகம் ஆகும். இந்தக் கொள்கையை வைத்துதான் அடுத்தகட்டத்துக்குச் செல்ல உள்ளோம். உங்களுடைய எதிா்பாா்ப்பின்படி 2026-இல் பாமக ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப நம்முடைய அரசியல் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கும் என்றாா்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: பாமகவின் தலைவராக தீரன், ஜி.கே.மணி ஆகியோரைத் தொடா்ந்து அன்புமணி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி ஓராண்டில் ஆட்சியைப் பிடித்தாா். அக்கட்சி பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. 1980-இல் பாமக தொடங்கப்பட்டது. ஆனால், பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு என்ன காரணம் என்பதை கட்சியினா் புரிந்துகொள்ள வேண்டும்.

பாமக தனித்துப் போட்டியிட்டபோது 4 இடங்களைப் பெற்றது. கடந்த தோ்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டபோது 5 இடங்களைப் பெற்றது. 4 இடங்களைப் பெற்ற கட்சி, அடுத்து 40 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பெறாததற்கு யாா் காரணம்? 2024 -இல் மக்களவைத் தோ்தலும், சட்டப்பேரவைத் தோ்தலும் இணைந்துகூட வரலாம். அன்புமணியை கோட்டையில் அமா்த்த வேண்டும். அதை நோக்கமாகக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா்.

முதல்வா் வாழ்த்து: பாமக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அன்புமணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், மநீம தலைவா் கமல்ஹாசன் உள்பட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com