சேலத்தில் கல்லூரிப் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி: மறியல் போராட்டம்

சேலத்தில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தனியார் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
தனியார் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

சேலத்தில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவரது மகன் அப்துல் கலாம். இவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் தனியார் கல்லூரிப் பேருந்தில் இருந்து மாணவர் அப்துல்கலாம் இறங்க முற்படும்போது  தவறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. மாணவன் அப்துல்கலாம் மீது கல்லூரிப் பேருந்து ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடல் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவன் அப்துல் கலாம் பேருந்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில்  மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற விபத்து ஏற்பட்டதாகவும் மாணவனுக்கு இழப்பீட்டுத் தொகை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தர வேண்டும் என வலியுறுத்தியதோடு சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

காவல்துறையினர் வந்து சமாதானம் பேசி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com