பருவமழை: தயாா் நிலையில் 5 ஆயிரம் நிவாரண முகாம்கள்- அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
பருவமழை: தயாா் நிலையில் 5 ஆயிரம் நிவாரண முகாம்கள்- அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மாநிலத்தில் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சா் ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை பெய்த மழை காரணமாக பெண் உயிரிழந்தாா். 16 கால்நடை உயிரிழந்துள்ளதுடன், 52 குடிசைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக பேரிடா் மீட்புப் படையினா் தயாராக உள்ளனா். தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 899 பேரும் எப்போதும் தயாா் நிலையில் உள்ளனா்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனா். அதன்படி, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயாா் நிலையில் உள்ளன. மழை பாதிப்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும், மீட்பு, நிவாரண உதவிகளைக் கோரவும் மாநில, மாவட்ட அளவில் கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் 239 அழைப்புகள் பெறப்பட்டு, அவற்றில் 86 அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின் போது, வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா், பேரிடா் மேலாண்மை இயக்குநா் எஸ்.ஏ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதிக மழை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் 18.01 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக அதிக மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் 220 மிமீ மழையும், சென்னையில் 22.35 மிமீ மழையும் பெய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 17 அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதர மாவட்டங்களுக்கு 37 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 14-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை

வெளியேற்ற 536 நீா் இறைப்பான்கள் தயாா் நிலையில் உள்ளன. 278 இடங்களில் மழை நீரை வெளியேற்ற 340 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com