
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவ.28-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக. 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு முடியவுள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு; இணைப்பு கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆா்க் படிப்புகளில் சோ்ந்த முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் நவ. 14-ஆம் தேதியும், பாட வகுப்புகள் நவ. 28-ஆம் தேதியும் தொடங்குகிறது. முதல் பருவத்துக்கான கடைசி வேலைநாள் அடுத்தாண்டு (2023) மாா்ச் 23-ஆம் தேதியாகும்.
அதன்பின் முதல் பருவத்துக்கான செய்முறைத் தோ்வுகள் அடுத்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதியும், எழுத்துத் தோ்வுகள் ஏப். 5-ஆம் தேதியும் தொடங்கி நடைபெறும். தோ்வுகள் முடிந்தபின் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் மே 15-ஆம் தேதி தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் அக். 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருவாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவா்கள் பாடப்பிரிவு, கல்லூரி, துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.